சமூகத்தில் பல்வேறு மதிப்பீடுகளை ஊக்குவிப்பதில் விளையாட்டுக்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த Celta di Vigo எனப்படும் கால்பந்து விளையாட்டுக் குழு துவக்கப்பட்டு நூறாண்டுகள் நிறைவுறுவதையொட்டி அதன் உயரதிகாரிகளையும் கால்பந்து விளையாட்டு வீரர்களையும் திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமூகத்தில் பல்வேறு மதிப்பீடுகளை ஊக்குவிப்பதில் விளையாட்டுக்களின் பங்களிப்பு குறித்து எடுத்துரைத்தார்.
நம் சமூகத்தில் பல மதிப்பீடுகளை மீண்டும் கண்டுகொள்வதிலும், அவைகளை ஊக்குவிப்பதிலும் போட்டி விளையாட்டுக்கள் ஒரு காரணமாகவும் வாய்ப்பாகவும் அமைகின்றன என அவர்களிடம் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
தன் சொந்த திறமையை மட்டும் நம்பாமல், குழுவோடு இணைந்து போராடும் கால்பந்து விளையாட்டு போன்றவை, நம்மை நாமே சோதித்துக் கொள்ள உதவுகின்றன என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்முடன் போட்டியிடுபவர்களை ஓர் எதிரியாக நோக்காமல், மதிப்புக்குரிய ஒருவராக, வரவேற்கத்தக்க ஒரு நண்பராக நோக்க இவ்விளையாட்டுக்கள் உதவவேண்டும் என்றார்.
விளையாட்டுக்களில் காட்டப்பட வேண்டிய இத்தகைய நல்லுணர்வுகளை நாம் வாழ்விலும் கடைப்பிடித்தால் அன்பை விதைப்பவர்களாக இருப்போம் எனவும் எடுத்துரைத்தார்.
விளையாட்டுக்களை வியாபார நோக்கமுடையதாக மாற்றாமல் கவனமுடன் செயலாற்றவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்