தேடுதல்

திருப்பலி நிறைவேற்றும் இலத்தீன் முதுபெரும்தந்தை Pierbattista Pizzaballa திருப்பலி நிறைவேற்றும் இலத்தீன் முதுபெரும்தந்தை Pierbattista Pizzaballa 

எருசலேமின் இலத்தீன் தலத்திருஅவைக்குப் புதிய கர்தினால்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்த முடிவு, நல்லிணக்கப் பாதையில் தொடர்வதற்கான அழைப்பை பிரதிபலிக்கிறது : முதுபெரும்தந்தை Pizzaballa

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் அண்மையில் கர்தினாலாக நியமிக்கப்பட்ட எருசலேமின் இலத்தீன் முதுபெரும்தந்தை Pierbattista Pizzaballa அவர்கள், திருத்தந்தையின் இந்நியமனம், புனித பூமியின் உலகளாவிய மற்றும் உரையாடலுக்கான அழைப்பின் அங்கீகாரம் என்று கூறினார்.

இதுகுறித்து, திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர், முனைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி அவர்களுடன் உரையாடிய முதுபெரும்தந்தை Pizzaballa அவர்கள், இந்நியமனம் உரோமை முதல் எருசலேம் வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்றும் தெரிவித்தார்.

உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 20 தலத்திருஅவைத் தலைவர்களுடன் இணைத்து எருசலேமின் இலத்தீன் முதுபெரும்தந்தையை கர்தினாலாக உருவாக்கப் போவதாக ஜூலை 9, இஞ்ஞாயிறன்று நிகழ்ந்த மூவேளை செபவுரையின்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்தபோது தான் மிகவும் வியப்பில் ஆழ்ந்ததாகவும் தெரிவித்தார் முதுபெரும்தந்தை Pizzaballa.

2020-ஆம் ஆண்டு அக்டோபர் 24 முதல் எருசலேமின் இலத்தீன் முதுபெரும்தந்தையாக இருக்கும் Pierbattista Pizzaballa அவர்கள், திருச்சபைகளுக்கிடையில் உரையாடல் மற்றும் ஒன்றிப்பை மேம்படுத்துவதற்காக தலத்திருஅவை ஆற்றிவரும் அரும்பணிகளையும் இவ்வுரையாடலின்போது முன்னிலைப்படுத்திப் பேசினார்.

எருசலேம் தலத்திருஅவை "உலகளாவிய, உரையாடல் மற்றும் சந்திப்பு" மற்றும் அனைத்துக் கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களைச் சந்திப்பதற்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும்  சிறப்பானதொரு பணியைக் கொண்டுள்ளது என்றும் கூறினார் முதுபெரும்தந்தை Pizzaballa.

அதேவேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது ஞாயிறு மூவேளை செபவுரையின்போது, புனித பூமியில் நிகழ்ந்துவரும் வன்முறை குறித்து வருத்தம் தெரிவித்ததுடன், உரையாடலை மீண்டும் தொடங்கவும், நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கான பாதைகளைத் தொடரவும் அழைப்பு விடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 July 2023, 14:52