இதயங்களில் விதைக்கப்படும் விதையாக அமைதி – திருத்தந்தை
மெரினா ராஜ் - வத்திக்கான்
வாழ்வின் இறுதி நிலையில், இறக்கும் தருவாயில் இருக்கும் போர்த்துக்கல் நாட்டு 17 வயது இளம்பெண் Edna Rodrigues திருத்தந்தைக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதில் செய்தியாகக் காணொளிப்பதிவு ஒன்றினை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன் 23 வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள காணொளிச்செய்தியில் எத்னாவின் கனிவு மற்றும் உள்ளார்ந்த அமைதிக்கு நன்றி என்றும், இந்த அமைதியே சிறு விதையாக அவரைக் காண்பவர் மற்றும் உரையாடுபவர்களின் இதயங்களில் விதைக்கப்படுகின்றது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மருத்துவரின் அறிவுரைப்படி இன்னும் சிறிது காலமே தான் உயிர்வாழப்போவதாகவும் எப்போது இயேசுவை எதிர்கொள்வேன் என்று காத்துக்கொண்டிருப்பதாகவும், எத்னா கடிதம் எழுதியுள்ள நிலையில், அவரது இந்த பயணத்தில் தான் ஆன்மிக ரீதியாக உடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உடல் நிலை காரணமாக லிஸ்பனில் நடக்கும் இளையோர் கொண்டாட்டத்தில் பங்கேற்க முடியாது என்று எழுதியுள்ள எத்னாவிற்கு, இயேசுவை எதிர்நோக்கிய அவரது பயணத்திற்காக சிறப்பாக செபிப்பதாகக் கூறி தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் கனவு கண்டதைப்போல திருத்தந்தையை உலக இளையோர் கொண்டட்டத்தில் தன்னால் சந்திக்க முடியாது என்பதையும், தனக்கும் தன் குடும்பத்தார்க்கும் மிகவும் முக்கியமானவராகத் திருத்தந்தையைக் கருதியதால் இக்கடிதத்தை எழுதியதாகவும் குறிப்பிட்டுள்ள எத்னாவிற்கு இறைவன் தமது ஆற்றலை அளிக்கத் தொடர்ந்து செபிப்பதாகவும் கூறி அக்காணொளியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்