தேடுதல்

வத்திக்கான் அருங்காட்சியகங்களின் நவீன கலைச்சேகரிப்பு கலைஞர்களுடன் திருத்தந்தை வத்திக்கான் அருங்காட்சியகங்களின் நவீன கலைச்சேகரிப்பு கலைஞர்களுடன் திருத்தந்தை   (VATICAN MEDIA Divisione Foto)

நம்மை முன்னோக்கி நகர்த்தும் பாய்மரம் கலைப்படைப்பு

கலைஞர்களால் உலகின் புதிய படைப்புக்களைக் கனவுகளாகக் காணவும், வரலாற்றில் புதியவற்றை அறிமுகப்படுத்தவும் முடியும் என்பதால் அவர்களும் இறைவாக்கினர்களைப் போன்றவர்கள்

மெரினா ராஜ் - வத்திக்கான்

கலைஞர்களின் படைப்பானது நாம் வாழ்வில் முன்னோக்கிச் செல்ல உதவும் தூய ஆவியால் நிரப்பப்பட்ட பாய்மரம் போன்றது எனவும், கலைப்படைப்புக்களின் மீது திருஅவை கொண்டுள்ள நட்புறவு இயற்கையானது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.    

ஜூன் 23 வெள்ளிக்கிழமை வத்திக்கானின் சிஸ்டைன் சிற்றாலயத்தில் வத்திக்கான் அருங்காட்சியகங்களின் நவீன கலைச்சேகரிப்பு திறப்பு விழாவின் 50வது ஆண்டு விழாவை முன்னிட்டு பங்கேற்ற கலைஞர்களுக்கு ஆற்றிய உரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நிகழ்காலத்தை இயற்கையாகவும் சிறப்பாகவும் வடிவமைக்கக்கூடிய கலைஞர்களுடன் திருஅவை எப்போது நல்ல உறவைக் கொண்டுள்ளது எனவும், கலைஞர்கள் தங்களது முரண்பாடுகள் மற்றும் துன்பங்களுக்கு மத்தியிலும் கூட தங்களின் இருத்தலியல், வாழ்க்கை மற்றும் உலகத்தின்  ஆழமான பக்கங்களை எடுத்துரைக்கின்றார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கூட்டத்தில் பங்கேற்றோர்
கூட்டத்தில் பங்கேற்றோர்

கலைப்படைப்பு மனிதன் நுழையக்கூடிய, சுவாசிக்கக்கூடிய, நகரக்கூடிய, மற்றும் பொருள்களையும் மனிதர்களையும் பாதுகாக்கக்கூடிய ஒரு இடத்தை திறக்கின்றது என்ற  Romano Guardini கருத்தை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கலைப்பணியின் போது தான், அனுபவம் மற்றும் புரிதலின் எல்லைகள் விரிவடைகின்றன என்றும் கூறினார்.

கலைஞர்கள் தங்களது உருவாக்கத்தில் உலகம் இதுவரை கண்டிராத ஒன்றை வெளிக்கொணர முயற்சிக்கிறார்கள் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனிதன் தன் நல்வாழ்க்கைக்காக உருவாக்கப்பட்டவன் என்ற நிலையை கலைஞர்கள் தங்களது உண்மைத்தன்மையை படைப்பில் வெளிப்படுத்துவதன் வழியாக அடைகின்றார்கள் என்றும் எடுத்துரைத்தார்.

கலைஞர்களின் படைப்பாற்றல் கடவுளின் படைப்புச்செயலில் பங்கேற்பதாகும் என்றும், கடவுளின் கனவை நனவாக்கும் உடன் உழைப்பாளர்கள் கலைஞர்கள் என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கலைஞர்களின் கண்கள் பார்த்தல், கனவு காணுதல் என்னும் இரண்டு செயல்களைச் செய்கின்றன என்றும் கூறினார்

கலைஞர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்
கலைஞர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்

நாம் அனைவரும் கண்ணாடியாலான மற்றும் தசையாலான கண்களைப் பெற்றுள்ளோம் என்ற இலத்தீன் அமெரிக்க எழுத்தாளரின் வரிகளை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தசையாலான கண்களால் வெளிப்புறத்தைப் பார்க்கும் நாம் கண்ணாடியாலான கண்களால் நமது கனவுகளைப் பார்க்கின்றோம் என்றும் எடுத்துரைத்தார்.

கலைஞர்களால் உலகின் புதிய படைப்புக்களைக் கனவுகளாகக் காணவும் வரலாற்றில் புதியவற்றை அறிமுகப்படுத்தவும் முடியும் என்பதால் அவர்களும் இறைவாக்கினர்களைப் போன்றவர்கள் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலை எப்போதும் அழகின் அனுபவத்துடன் இணைக்கப்பட்டு ஆன்மாவிற்குள் செல்கின்றது என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 June 2023, 12:50