தேடுதல்

நாசா காட்டும் பால்வெளி மண்டலங்கள் நாசா காட்டும் பால்வெளி மண்டலங்கள்  

உண்மையின் மீதான அன்பால் ஈர்க்கப்பட வேண்டும் : திருத்தந்தை

இப்புவியின் ஒவ்வொரு பகுதியும் உங்கள் முன் வைக்கும் அனைத்தும் உங்களை ஆச்சரியமூட்டும் என்றும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உங்களின் ஆராய்ச்சியிலும், வாழ்க்கையிலும் வியப்புணர்வை ஒருபோதும் இழக்காதீர்கள் என்று இளம் வானியலாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

வத்திக்கான் ஆய்வகத்தின் கோடைகால வானியற்பியல் பள்ளியின் பங்கேற்பாளர்களுக்கு அனுப்பிய தனது செய்தியில், இவ்வாறு வேண்டுகோள் விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எப்போதும் உண்மையின் மீதான அன்பால் ஈர்க்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

பெருகிய முறையில் அதிநவீன கருவிகள் வழியாக இப்புவியைத் தொடர்ந்து அவதானித்து வருவதால், அவர்களின் ஆராய்ச்சியிலும், வாழ்க்கையிலும், வியப்புணர்வை ஒருபோதும் இழந்துவிடக் கூடாது என்றும் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இப்புவியின் பரந்த தன்மை, அதன் மகத்தான அளவு மற்றும் அடையாளம் காணப்பட்ட பால்வெளி மண்டலங்கள், விண்மீன்கள் மற்றும் கிரகங்களின் வியக்கத்தக்க எண்ணிக்கையால் நாம் ஈர்க்கப்பட்டுள்ளோம் என்றும் எடுத்துக்காட்டினார்.

21-ஆம் நூற்றாண்டின் விடியலில், இளம் விஞ்ஞானிகளாகிய நீங்கள், இந்த கோடைக்காலப் பள்ளியின் பயிற்சியின்போது ஏதாவது ஒன்றைப் புரிந்துகொள்வதற்கும், புதிய தரவுகளை நன்கு கிரகிக்க மற்றும் புரிந்துகொள்ளும் திறன் கொண்ட முறைகளை உருவாக்குவதற்கும் நீங்கள் முயல்கிறீர்கள் என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டார்.  

நீங்கள் வியப்பின் அனுபவத்தைப் பெறும் வரை, உங்கள் ஆராய்ச்சியின் முடிவுகளில் நீங்கள் திருப்தியடைய மாட்டீர்கள் என்பது தனது நம்பிக்கை என்றும், உண்மையின் மீதான அன்பினால் நீங்கள் எப்போதும் ஈர்க்கப்படுவீர்கள் என்றும், இப்புவியின் ஒவ்வொரு பகுதியும் உங்கள் முன் வைக்கும் அனைத்தும் உங்களை ஆச்சரியமூட்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

கடந்த வாரம் ஜெமெல்லி மருத்துவமனையில் குடலிறக்க நோய்க்காக அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு நலமடைந்து வந்த வேளை இந்தச் செய்தியை எழுதியதாகக் கூறிய திருத்தந்தை, இப்பயிற்சியின் பங்கேற்பாளர்களுக்கு வழிகாட்டும் “Specola Vaticana” ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வாய்ப்பாக இதனைக் கருதுவதாகவும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 June 2023, 13:50