தொண்டுப் பணிகளுக்கான ஆற்றலை கிறிஸ்துவிடமிருந்து பெறுகின்றோம்
மெரினா ராஜ் = வத்திக்கான்
தலத்திருஅவையின் அனைத்து உதவி நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க வடிவம் அதன் செயல்பாட்டின் நிர்வாக திறனில் அல்ல மாறாக தாராள இதயத்திலிருந்து வரும் எளிய மனிதாபிமான முயற்சியில் வெளிப்படுகின்றது என்றும், கிறிஸ்துவிடமிருந்து இந்தத் தொண்டுப்பணிகளுக்கான ஆற்றலை நாம் பெறுகின்றோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன் 23 வெள்ளிக்கிழமை CAL எனப்படும் இலத்தீன் அமெரிக்க தலத்திருஅவைக்கு உதவும் நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களைச் சார்ந்தவர்களை வத்திக்கானில் சந்தித்து பேசிய போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
குறிப்பிட்ட தலத்திருஅவைகளின் வாழ்க்கை மற்றும் வளர்ச்சியைக் குறிக்கும் கேள்விகளைக் கையாளுதல், சம்பந்தப்பட்ட துறைகளின் கீழ் செயல்படுதல், பொருளாதார வளங்களில் அவர்களுக்கு ஆலோசனை அளித்தல், உதவுதல் போன்ற பணிகளை CAL செய்து வருகின்றது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது இலத்தீன் அமெரிக்காவின் பகுதிகளுக்காகப் பணியாற்றும் பன்னாட்டு, தேசிய திருஅவை நிறுவனங்கள் மற்றும் தலத்திருஅவை நிறுவனங்களுக்கிடையேயான உறவுகளை ஆதரிக்கிறது என்றும் கூறினார்.
கிறிஸ்தவ நம்பிக்கை என்பது நமக்கு முதன்முதலாகக் கற்பிக்கும் தந்தைக் கடவுளின் நட்புறவை தொடர்ந்து உறுதிப்படுத்துகின்றது என்றும், ஒவ்வொரு நாளும் ஆச்சரியத்துடனும் நன்றியுடனும் மீண்டும் மீண்டும் அதனைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் வலிறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இலத்தீன் அமெரிக்காவிற்கு ஒருமைப்பாட்டுணர்வுடன் கூடிய உதவி தேவை என்றும், புவியியல் மற்றும் இருத்தலியல் சுற்றுப்புறங்கள் எங்கும் நற்செய்தி அறிவிப்பிற்காக உதவுங்கள். ஏழைகள் மற்றும் மிகவும் ஒதுக்கப்பட்டவர்களின் தேவைகளை நிறைவேற்ற தொடர்ந்து உதவுங்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1958ஆம் ஆண்டில் திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் அவர்களால் மேய்ப்புப்பணி, தொலைநோக்கு, உள்ளுணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் CAL உருவாக்கப்பட்டது என்பதை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலத்திருவையின் செயல்பாடுகள் புதுப்பித்தலின் பொதுவான சூழலில் பராமரிக்கப்பட்டு முதிர்ச்சியடைய வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
நற்செய்தி அறிவிப்புத் திட்டங்களை பொருளாதார ரீதியாக ஆதரித்தல், அவசரகால சூழல்களில் உடன் இருத்தல், தலத்திருஅவையை மேம்படுத்துவதற்கான செயல்பாடுகளைச் செய்தல் ஆகியவை CALன் குறிப்பிடத்தக்க செயல்பாடுகள் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவசரமான சவால்களை எதிர்கொள்ள சில உதவி நிறுவனங்களின் ஒத்துழைப்பை CAL பெற்றுள்ளது என்றும் கூறினார்.
பரந்த மற்றும் அதிக நுணுக்கமான தொண்டுப்பணிகள் பற்றிய புதிய கற்பனையை நான் கனவு காணத் துணிகிறேன் என்ற திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களின் வார்த்தைகளை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அதன் சொந்த இயல்பு மற்றும் பணி உள்ளது என்றும், அவர்கள் அனைவரும் கத்தோலிக்க அடையாளத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்றும் எடுத்துரைத்தார்.
இயேசு கிறிஸ்துவின் அன்பும் தொண்டுப்பணிகளும் நாம் நம்முடைய பணிகளைத் தாராளமாக செய்வதற்கான ஆற்றலைத் தருகின்றன என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த அன்புதான் எல்லா நன்மைகளின் அடையாளமாக தந்தைக்கடவுளை ஏற்றுக்கொள்ள நம்மை அழைக்கின்றது என்றும் கூறினார்.
தமஸ்கு நகர் நோக்கிச் சென்ற திருத்தூதர் பவுல் இயேசுவால் ஆட்கொள்ளப்பட்டது, அவரது அன்பின் அடையாளமாக மாறி அவருக்குள் ஆற்றல், துணிவு, மற்றும் வீரத்தை அளித்தது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த ஆற்றலால்தான் அவரால், நற்செய்தியை அறிவிக்காவிடில் எனக்கு ஐயோ கேடு என்று சொல்ல முடிந்ததாகவும் கூறினார்.
தொண்டுப்பணி முற்றிலும் மதச்சார்பற்ற உதவி அமைப்பிலிருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்து கத்தோலிக்க உதவி நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களுக்கு இடையே மனித உடன்பிறந்த உறவு மற்றும் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு உயிர்ப்பிக்கப்படுகின்றன என்றும் எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்