அஞ்சாமல் துணிவுடன் நற்செய்திக்குச் சான்றுபகருங்கள் : திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
விளைவுகளைக் குறித்து கவலைப்படாமல் நற்செய்திக்கு உண்மையாக இருக்கும்படி இயேசு உங்களை அழைக்கிறார் என்றும் உங்களுக்குத் தேவையானவற்றையெல்லாம் அவர் கவனித்துக்கொள்வார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன் 25, இஞ்ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை செப உரையில், இவ்வாறு உரைத்த திருத்தந்தை, போதிய கவனத்தையும் அக்கறையையும், வாழ்க்கையில் முக்கியமான காரியங்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அஞ்சவேண்டாம் என்று மூன்று முறை தன் சீடர்களிடம் கூறுவதன் வழியாக, நற்செய்தியின் பொருட்டு அவர்கள் பெறவிருக்கும் துன்புறுத்தல்கள் குறித்து எடுத்துக்காட்டிய இயேசு, அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து பயம்கொள்ளாமல் நம்பிக்கையில் நிலைத்திருக்கும்படியும் அவர்களை வலியுறுத்தினார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
திருஅவை மிகுந்த மகிழ்ச்சியையும், பெரும் துன்புறுத்தலையும் அனுபவித்துள்ளதால், இயேசு கூறும் இவ்வார்த்தைகள் இன்றையச் சூழலுக்கு மிகவும் பொருத்தமுடையதாக இருக்கின்றன என்று உரைத்த திருத்தந்தை, இறையாட்சிக் குறித்த அறிவிப்பு என்பது மன்னிப்பின் அடிப்படையில் நிறுவப்பட்ட அமைதி மற்றும் நீதியின் செய்தியாகும் என்றும், ஆனால் இது எதிர்ப்பு, வன்முறை மற்றும் துன்புறுத்தலை எதிர்கொள்கிறது என்றும் சுட்டிக்காட்டினார்.
வாழ்க்கையை மிகவும் அர்த்தமுடன் வாழத் தூண்டாத அற்பமான காரியங்களைத் துரத்திச் செல்வதற்குப் பதிலாக, நற்செய்திக்கு உண்மையாக இருக்கும் பொருட்டு, தவறான புரிதல்கள் மற்றும் விமர்சனங்கள், மதிப்பு மற்றும் பொருளாதார நன்மைகளை இழப்பது எவ்வளவோ நல்லது என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
அருள்பணியாளர்கள் மற்றும் துறவியர் பக்கம் தன் பார்வையைத் திருப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்களின் பணிகளில் அவர்கள் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன், இயேசுவோடு இருப்பதற்கு அவர்கள் அதிக நேரத்தை ஒதுக்கவேண்டும், இல்லையெனில் இவ்வுலகக் காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தாங்கள் யார் என்பதையே அவர்கள் மறந்துவிடுவார்கள் என்றும் எச்சரித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்