தேடுதல்

Biagio Agnes விருது அறக்கட்டளை உறுப்பினர்களுடன் திருத்தந்தை Biagio Agnes விருது அறக்கட்டளை உறுப்பினர்களுடன் திருத்தந்தை   (Vatican Media)

மறைப்பணியாக பார்க்கப்படும் ஊடக பணியாளர்களின் தொழில்

சரியான தகவல்களைப் பரப்புதல், இளைய தலைமுறையினருக்குக் கல்வி மற்றும் பயிற்சி அளித்தல், ஆதரவளிக்கும் கலாச்சார முயற்சிகளை ஊக்குவித்தல் போன்றவற்றில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் தகவல் தொடர்பு பணியாளர்கள் செயல்பட வேண்டும்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

தங்கள் தொழிலை  வாழ்வின் மறைப்பணியாக பார்க்கும் தகவல் தொடர்பு பணியாளர்கள் செவிமடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, உண்மையை சேகரிக்கும் குறிப்பேடு போலவும், சிந்தனையை விரிவுபடுத்த உதவும் எழுதுகோல் போலவும், இதயத்திலிருந்து செலுத்தப்படும் பார்வை கொண்டு வாழவும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 24, சனிக்கிழமை வத்திக்கானில் பன்னாட்டு இதழியல் மற்றும் தகவல் தொடர்புக்கான பியாஜியோ ஆக்னஸ் 15ஆவது  ஆண்டு விருதை வழங்கும் அறக்கட்டளை உறுப்பினர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பியாஜியோ ஆக்னஸ், ஒரு பிரபலமான இத்தாலிய பத்திரிகையாளர், RAI இத்தாலிய தொலைக்காட்சியின் முக்கியமான நபர், பொதுப்பணியின் பாதுகாவலர், ஞானத்துடன் கூடிய நிர்வாகத்திறன், உண்மையான மற்றும் சரியான தகவல்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் ஆற்றல் பெற்றவர் என்றும் அவரைக் குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை அவரைப்போல் உள்ளவர்களின் ஆற்றலை வெளிக்கொணர்வதற்காக நடத்தப்படும் இவ்விருதைப் பாராட்டினார்.

கூட்டத்தில் பங்கேற்றோர்
கூட்டத்தில் பங்கேற்றோர்   (Vatican Media)

போர் மற்றும் மோதல்களின் துன்பத்தை, பயத்தை விவரித்து அனைவரையும்  அத்துன்பத்தினை உணர வைப்பதில் ஊடகத்துறைப் பணியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சரியான தகவல்களைப் பரப்புதல், இளைய தலைமுறையினருக்குக் கல்வி மற்றும் பயிற்சி அளித்தல், ஆதரவளிக்கும் கலாச்சார முயற்சிகளை ஊக்குவித்தல் போன்றவற்றில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட வலியுறுத்தினார்.

மூடப்பட்ட மற்றும் பிளவுபட்ட உலகின் நிழல்களை அகற்றவும், நாம் பெற்றதை விட சிறந்த நாகரிகத்தை உருவாக்கவும் சரியான வார்த்தைகள் நம்மில் இருந்து வெளிப்பட வேண்டும் என்றும், இது நம் ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் முயற்சி என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும் ஊடகவியலாளர்களின் குறிப்பேடு எழுதுகோல் பார்வை ஆகிய மூன்றினையும் முன்னிலைப்படுத்தி கீழ்க்கண்டவாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சமூக ஊடகவியலாளர்களுக்கு எடுத்துரைத்தார்.   

ஊடகவியலாளர்களுடன் திருத்தந்தை
ஊடகவியலாளர்களுடன் திருத்தந்தை   (Vatican Media)

குறிப்பேடு

பத்திரிகையாளர் ஒருபோதும் வரலாற்றின் கணக்காளர் அல்ல, பங்கேற்பு, இரக்க உணர்வுடன் அதன் தாக்கங்களை அனுபவிக்க முடிவு செய்த ஒரு நபர் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உண்மையை எழுத உதவும், கேட்பதன் முக்கியத்துவத்தை நினைவூட்டும், என்ன நடக்கிறது என்பதை எழுத, சரிபார்க்க, உண்மைத் தன்மையைக் கண்டறிய குறிப்பேடு உதவும் என்றும் கூறினார்.

எழுதுகோல்

சிந்தனையை விரிவுபடுத்தவும், மூளையில் சிந்திப்பவற்றை கைகளால் எழுதி இரண்டையும் இணைக்கின்றது. நினைவுகளை நிகழ்காலத்துடன் இணைக்க உதவுகிறது. பத்திரிகையாளர்களின் கைவினைத்திறனை தூண்டுகிறது, விவரங்களைச் சரிபார்த்து, ஆராய்ந்து, ஒவ்வொரு வரியையும் சீரமைக்கின்றது. புத்திசாலித்தனம் மனசாட்சி இரண்டையும் இணைத்து செயல்பட வைக்கின்றது. "ஆக்கப்பூர்வமான செயலை" நினைவுபடுத்துகிறது, உண்மைக்கான தேடலை நேர்மையுடனும் மரியாதையுடனும் இணைக்கின்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை

பார்வை.

குறிப்பேடு, எழுதுகோல் இரண்டும் எதார்த்தத்தைப் பற்றிய பார்வை இல்லாவிட்டால் சாதாரண பொருள்களாகிவிடுகின்றன. வாழ்க்கையை மாசுபடுத்தும் வார்த்தைகள், படங்கள் மற்றும் செய்திகளால் திசைதிருப்பப்படும் இவ்வுலகில் மொழியை நிராயுதபாணியாக்கி உரையாடலை ஊக்குவிக்க என்ன நடக்கிறது என்பதை நாம் கவனமாகப் பார்க்க வேண்டும். நமது பார்வை இதயத்திலிருந்து செலுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 ஜூன் 2023, 12:24