தேடுதல்

Centesimus Annus பாப்பிறை அறக்கட்டளை உறுப்பினர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் Centesimus Annus பாப்பிறை அறக்கட்டளை உறுப்பினர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

குரலற்றவர்களுக்காகக் குரல் கொடுக்கும் சமூகமே நமக்குத் தேவை

சமூகத்தில் பலவீனமானவர்களுக்கு ஒரு மீட்பாகவும், குரலற்றவர்களுக்குக் குரலாகவும் செயல்படவேண்டும் என்றும் இதுவே Centesimus Annus பாப்பிறை அறக்கட்டளையின் விலைமதிப்பற்ற பணி

மெரினா ராஜ் – வத்திக்கான்

குரலற்றவர்களுக்காகக் குரல் கொடுக்கத் தெரிந்த சமூகமே நம் அனைவருக்கும் தேவை என்றும், சமூக வளர்ச்சிக்கு ஆதரவான சிந்தனை மற்றும் செயல்பாட்டிற்கு பங்களித்து, அமைதியின் பாதையில் ஒன்றாக நடக்க வேண்டும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

‘எதிர்காலத்தை உருவாக்கும்  நினைவுகள், சமூகத்தின் அடிப்படையில் சிந்தித்து செயல்படுதல்‘ என்ற தலைப்பில் ஜூன் 5 திங்களன்று நூறாவது ஆண்டு’ என்று பொருள்படும் Centesimus Annus பாப்பிறை அறக்கட்டளையின் 30 ஆவது ஆண்டை முன்னிட்டு அதன் உறுப்பினர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

1993ஆம் ஆண்டு திருஅவையின் சமுதாய எண்ணங்களை வளர்க்கும் நோக்கத்துடன் திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்களால் உருவாக்கப்பட்ட பாப்பிறை அறக்கட்டளையின் உறுப்பினர்கள் தங்களது அர்ப்பணிப்பால் சமூகக் கோட்பாடுகள் எழுத்தளவில் மட்டுமன்று, மனிதனின் சமூக வாழ்க்கை முறையாக மாறலாம் என்பதை வெளிப்படுத்துகின்றார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்

அறக்கட்டளை உறுப்பினர்களுடன் திருத்தந்தை
அறக்கட்டளை உறுப்பினர்களுடன் திருத்தந்தை

தனிநபரின் நடுநிலைத்தன்மை, பொது நன்மை, ஒற்றுமை, உறுதுணை ஆகியவை உறுதியான செயல்களாக மாற்றப்பட்டு பலரின் இதயங்களையும் செயல்களையும் மாற்றியதற்காக அவ்வறக்கட்டளையின் உறுப்பினர்களுக்கு தன் நன்றியினைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒருங்கிணைந்த சூழலியலில் எல்லாம் தொடர்புபடுத்தப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன என்றும் எடுத்துரைத்தார்.

சுற்றுச்சூழல் பிரச்சினை சமூகப் பிரச்சினையிலிருந்து பிரிக்க முடியாதது அவை ஒன்றாக இணைந்து செல்கின்றன என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுற்றுச்சூழலைக் கவனித்து, ஏழைகள் மேல் கவனம் செலுத்த ஒன்றிணைந்து நிற்கவும் பாப்பிறை அறக்கட்டளை உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.

யாரும் தனியாக மீட்கப்படுவதில்லை என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனிமனிதத்துவத்தில் விழுந்து வாழ்வையும் மகிழ்வையும் இழந்துவிடாது உடன்பிறந்தஉறவு, சமூக நட்புறவு கொண்டு கவனமாகச் செயல்படவும் கேட்டுக்கொண்டார்.

ஒருவர் இரண்டு தலைவர்களுக்கு பணியாற்ற முடியாது என்ற  நற்செய்தி வரிகளை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செல்வத்திற்கா கடவுளுக்கா என்று தான் இயேசு கேட்கிறார் அலகைக்கா கடவுளுக்கா என்று கேட்கவில்லை ஆகவே பணம் அலகையை விட கொடியது என்றும் சுட்டிக்காட்டினார்.

சமூகத்தில் பலவீனமானவர்களுக்கு ஒரு மீட்பாகவும், குரலற்றவர்களுக்குக் குரலாகவும் செயல்படவேண்டும் என்றும் இதுவே Centesimus Annus பாப்பிறை அறக்கட்டளையின் விலைமதிப்பற்ற பணி என்றும் பாராட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 June 2023, 14:19