தேடுதல்

திரு நற்கருணை திரு நற்கருணை 

அமைதிப் பணியை மேற்கொள்பவர்கள் கடவுளின் மக்கள்

140 ஆவது தேசிய நற்கருணை மாநாட்டில் பங்கேற்க ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் மைக்கிள் செர்னி அவர்களை 2023ஆம் ஆண்டு மே 29 திங்கள் கிழமையன்று திருத்தந்தை தேர்ந்தெடுத்தார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

கடவுளின் பிள்ளைகள் என்று அழைக்கப்படுபவர்கள், அமைதியை உருவாக்குபவராக, நற்செயல்களை விரும்புபவராக, நற்செய்தியைப் பறைசாற்றுபவராக, மக்களின் வாழ்க்கை, வார்த்தை, முன்னுதாரணம் ஆகியவற்றால் அமைதிப்பணியை மேற்கொள்பவராக இருக்க வேண்டும் என்றும் இதுவே நமது கடமையும் இறைவனின் விருப்பமும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 4 ஞாயிற்றுக்கிழமை முதல் 11 ஞாயிற்றுக்கிழமை வரை காங்கோ குடியரசின் Lubumbashi என்னுமிடத்தில் நடைபெறவுள்ள 140ஆவது தேசிய நற்கருணை மாநாட்டிற்கு திருத்தந்தையின் பெயரால் பங்கேற்க இருக்கும் ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் மைக்கிள் செர்னி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை 13ஆம் லியோ அவர்களால் தொடங்கப்பட்ட தேசிய நற்கருணை மாநாட்டின் 140 வது ஆண்டு நிறைவைக் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், காங்கோ குடியரசின் நற்செய்தி,  பல நற்செய்தி அறிவிப்பாளர்களால் ஆதரிக்கப்பட்டு, மீட்பராகிய கிறிஸ்துவை பயமின்றி கடின உழைப்பு மற்றும் அன்புடன் பிற நாடுகளுக்கு அறிவிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம்பிக்கையின் பாதுகாவலரான அன்னைமரியா, நம்பிக்கையாளர்களின் இதயங்கள் கிறிஸ்துவை எப்போதும் நெருக்கமாகப் பின்பற்றுவதற்கான அருளையும், அமைதி, இணக்கம், முன்னேற்றம் போன்ற விரும்பக்கூடிய அனைத்து நன்மைகளை அளிக்கும்  வலிமையையும் தர தான் தொடர்ந்து செபிப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையினாலும், முழுத்திருஅவையின் தேவைகளில் கவனம் செலுத்தவும் சிறப்பிக்கப்படும் இந்நற்கருணை மாநாட்டின் போது கூடிவரும் அனைத்து நிலையினருக்கும் திருத்தந்தையின் பெயரால் செபிக்கவும் ஆசீரளிக்கவும் அக்கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

2023ஆம் ஆண்டு மே 29 திங்கள் கிழமையன்று இந்த 140 ஆவது தேசிய நற்கருணை மாநாட்டில் பங்கேற்க ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் மைக்கிள் செர்னி அவர்களை திருத்தந்தை தேர்ந்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 June 2023, 10:45