தேடுதல்

 CONSOLATA மறைப்பணியாளர்கள் CONSOLATA மறைப்பணியாளர்கள் 

வாழும் நற்செய்திக்கு உயிர் தரும் ஒளியாக மறைப்பணியாளர்கள்

Consolata மறைப்பணியாளர்கள் சபை தனது 122 ஆண்டுகால வரலாற்றில் 30 நாடுகளைச் சேர்ந்த 905 மறைப்பணியாளர்களைக் கொண்ட பன்முக கலாச்சார மற்றும் பன்னாட்டு சபையாகத் திகழ்கின்றது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஆன்மிக மற்றும் மேய்ப்புப்பணிக்கான புதிய பாதைகளை அடையாளம் கண்டு வாழ வேண்டும் என்றும், மறைப்பணியாளர்கள் தாங்கள் வாழும் இடங்களில் தங்களது உடன் இருப்பாலும் செயலாலும் நற்செய்திக்கு உயிர் கொடுக்கும் ஒளியாக திகழவேண்டும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 22 முதல் ஜூன் 25 வரை நடைபெறும் Consolata மறைப்பணியாளர்களுக்கான 16ஆவது பொதுப்பேரவையை முன்னிட்டு அச்சபையின் தலைவர், தந்தை Stefano Camerlengo அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மறைப்பணியாளர்கள் திருஅவைக்கு ஆற்றிவரும் பணிக்காகத் தன் நன்றியினையும் தெரிவித்துள்ளார்.

உலகின் எல்லை வரை என் சாட்சியாக இருப்பீர்கள் என்ற கருப்பொருளில் நடைபெறும் இப்பேரவையில் பங்குபெறும் மறைப்பணியாளர்கள் அனைவரும், கிறிஸ்துவை உண்மையாக துணிவுடன் பின்பற்றவும், மனித உடன்பிறந்த உறவு கொண்டு, மகிழ்வுடன் வாழவும் தங்களைப் புதுப்பித்துக் கொள்ள வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சபையின் நிறுவனரான அருளாளர் Giuseppe Allamano அவர்களின் வழிகாட்டுதலின்படி, இறைஅருளாலும், செபத்தாலும், எல்லா இடங்களிலும் சபையின் பணி பரவ வேண்டும் என்ற விருப்பத்திற்கு ஊட்டமளிக்கும் வகையில், புதுப்பிக்கப்பட்ட ஆற்றலுடன் தொடரவும் மேய்ப்புப்பணிக்கான பாதைகளை அடையாளம் கண்டு வாழவும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Consolata மறைப்பணியாளர்கள் சபை தனது 122 ஆண்டுகால வரலாற்றில் 30 நாடுகளைச் சேர்ந்த 905 மறைப்பணியாளர்களைக் கொண்ட பன்முக கலாச்சார மற்றும் பன்னாட்டு சபையாகும். மேலும் ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஆசியா ஐரோப்பா கண்டங்களைச் சார்ந்த 29 நாடுகளில் 231 இடங்களில் குழுக்களாகப் பணியாற்றி வருகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 June 2023, 12:11