தேடுதல்

இத்தாலிய தொலைக்காட்சியான RAI நிறுவன நேர்காணலின் போது திருத்தந்தை இத்தாலிய தொலைக்காட்சியான RAI நிறுவன நேர்காணலின் போது திருத்தந்தை   (ANSA)

ஒருவர் ஒருவரை மன்னித்து ஏற்க 2025 ஜூபிலி உதவட்டும்

அமைதிக்கான ஏக்கத்தில் இடம்பெறும் பேச்சுவார்த்தைகளில் அவ்வப்போது சிறிது பலனாவது கிட்டும் வாய்ப்பு உள்ளது ஆனால், போரில் அனைத்தும் அழிந்துவிடுகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இவ்வுலகம் எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும், சமூகப் பிரச்சனைகள் குறித்தும் இத்தாலிய தொலைக்காட்சியான RAI நிறுவனத்திற்கு நேர்முகம் ஒன்றை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவரும் செபிக்குமாறும், தங்கள் விசுவாசத்தின் வழி பலத்தைக் கண்டுகொள்ளுமாறும் அதில் அழைப்புவிடுத்தார்.

விசுவாசம் மற்றும் மதம் குறித்த RAI தொலைக்காட்சி நிறுவனத்தின் வார நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமையன்று கலந்துகொண்ட திருத்தந்தை, மனிதகுலத்தின் அளவுக்குப் பழமையான அமைதிக்கான ஏக்கத்தில் இடம்பெறும் பேச்சுவார்த்தைகளில் அவ்வப்போது சிறிது பலனாவது கிட்டும் வாய்ப்பு உள்ளது ஆனால், போரில் அனைத்தும் அழிந்துவிடுகிறது எனவும் கூறினார்.

ஐரோப்பாவைக் காயப்படுத்திவரும் உக்ரைன் போர் மற்றும் ஏனையப் போர்கள் குறித்தும் தன் நேர்முகத்தில் குறிப்பிட்ட திருத்தந்தை, வன்முறைக்கும் சித்ரவதைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது நிறுத்தப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ராய் தொலைக்காட்சி நிறுவனத்தாருடன் திருத்தந்தை பிரான்சிஸ்
ராய் தொலைக்காட்சி நிறுவனத்தாருடன் திருத்தந்தை பிரான்சிஸ்

மக்கள் ஒருவர் மற்றவரைக் கண்டுகொள்ளவும், நண்பர்களாக மாறவும், மக்களின் வாழ்வை அழிக்கும் தீமைகளை ஒழிக்கவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உதவவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

இடம்பெறவிருக்கும் 2025 ஜூபிலி பற்றியும் இந்நிகழ்ச்சியில் குறிப்பிட்ட திருத்தந்தை, இது மக்களைக் கடவுளோடும், ஒருவர் ஒருவருக்கு நெருக்கமாகவும் கொணரவும், பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண உதவவும், அனைத்திற்கும் மேலாக ஒருவர் ஒருவரை மன்னித்து ஏற்கவும் வழிகாட்டுவதாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

மற்றவர்களைக் கனிவுடன் நடத்துவதுடன், துயருறுவோருடன் உடன்நடந்து செல்லவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துன்புறுவோரின் அருகில் இருப்பதே ஆறுதலைக் கொணரும், அங்கு வார்த்தைகள் தேவையில்லை எனவும் எடுத்துரைத்தார்.

வருங்காலத் தலைமுறையினர் பாராமுகம் கொண்டவர்களாகச் செயல்படாமல், கனிவும் கருணையும் கொண்டவர்களாக, அருகாமையின் அருமையை உணர்ந்தவர்களாகச் செயல்படவேண்டும் என பெற்றோர்களும் ஆசிரியர்களும் இக்காலக் குழந்தைகளுக்குக் கற்றுத் தரவேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 June 2023, 14:08