சுயநலத்தில் தன்னை இழந்துவிடாமல், சேவை உணர்வுடன் செயல்பட
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
Canons Regular of the Lateran என்ற துறவுசபையை ஜூன் 19, திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவேண்டல், சமூக வாழ்வு, பொதுவில் பகிர்ந்து வாழ்தல், மற்றும் திருஅவைக்குப் பணிபுரிதல் என்ற நான்கு தலைப்புக்களில் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
சுயநலத்தில் நாம் விழாமல் இருக்க இதயத்தின் மூச்சுக்காற்றாக இறைவேண்டல் உள்ளது என்ற திருத்தந்தை, ஒரே குடும்பமாக வாழும் நாம் ஒருவர் ஒருவரைப்பற்றி புறம்கூறாமல் ஒன்றிணைந்து வாழவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
ஒரே குடும்பமாக துறவுசபையினர் வாழும்போது, அனைத்தையும் பொதுவில் வைத்து மற்றவர்களுடன் அவைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
துறவுசபைகளின் ஒவ்வோர் அங்கத்தினரும் சுயநலத்தில் தன்னை இழந்துவிடாமல், திருஅவைக்கான சேவை உணர்வுடன் செயல்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
இறைவேண்டல், சமூக வாழ்வு, பொருட்களைப் பகிர்தல், திருஅவைக்கான சேவை இந்த நான்கும் ஒவ்வோர் அப்போஸ்தலப் பணியையும் ஒளியூட்டுவதாகவும், வாழ்வுக்கு இயைந்ததாகவும் மாற்றுகின்றன என மேலும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்துறவு சபையின் பாரம்பரியமும், ஜெபத்திற்கும், கல்விக்கும், மறைப்பணிக்கும் தங்களை ஒரே நேரத்தில் அர்ப்பணிப்பதும், மாறிவரும் காலச்சூழல்களுக்கு இயைந்த வகையில் பதிலுரைப்பதும், அவர்களின் தனிவரத்தால் ஊக்கம் பெற்றவைகளாக உள்ளன என எடுத்துரைத்தார்.
வாழ்வில் இறைவேண்டலின் முக்கியத்துவம், சமூக வாழ்வில் புறம்கூறலை கைவிடல், பொருட்களைப் பகிர்தல், திருஅவைக்கு சுயநலமின்றி சேவையாற்றுதல் போன்றவைகளை மீண்டும் மீண்டும் Canons Regular of the Lateran துறவுக் குழுமத்திடம் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்