புலம் பெயர்ந்தோர் படகு விபத்துக்கள் மீண்டும் வேண்டாம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
கிரேக்கக் கடற்கரையருகே அண்மையில் இடம்பெற்ற புலம் பெயர்ந்தோர் படகு விபத்து குறித்து தன் ஞாயிறு மூவேளை செபவுரைக்குப்பின் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதில் உயிரிழந்தவர்களுக்கான செபத்திற்கு உறுதி கூறியதுடன், இத்தகைய சோக நிலைகள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதை உறுதிச் செய்யவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.
ஜூன் 20ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று புகலிடம் தேடுவோர் உலக தினம் சிறப்பிக்கப்படுவதைக் குறித்து நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த புதனன்று ஏறக்குறைய 400 முதல் 750 பேரை ஏற்றி வந்த மீன்பிடிப் படகு ஒன்று அமைதியான கடல் சூழலிலும் கிரேக்கம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டார்.
ஜூன் மாதம் 14ஆம் தேதி இடம்பெற்ற இந்த விபத்து குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்ட ICMC எனப்படும் அனைத்துலகக் குடிபெயர்வோர்க்கான கத்தோலிக்க அமைப்பு, உதவித் தேவைப்படும் சகோதரர் சகோதரிகளுக்கு கை கொடுக்க வேண்டியது நம் அனைவரின் கடமை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
போராலும், உள்நாட்டு மோதல்களாலும், சித்ரவதைகளாலும், வாழ்வின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாதக் காரணத்தாலும் புலம்பெயரும் மக்களுக்கு நம்பிக்கையை வழங்கி அவர்களைக் காப்பாற்றவேண்டிய கடமையை வலியுறுத்தியுள்ள இக்கத்தோலிக்க அமைப்பு, இத்தகைய கோர விபத்துக்கள் குறித்து உலகம் கை கட்டி மௌனம் காக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.
அண்மையில் கிரேக்கக் கடற்கரையோரம் இடம்பெற்ற பெரும்படகு விபத்தில் இதுவரை 78 இறந்த உடல்கள் எடுக்கப்பட்டுள்ளன, மற்றும் 104 பேர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போயுள்ள மக்களுள் 100 பேர் வரை குழந்தைகள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்