கிரேக்க கப்பல் விபத்தில் இறந்தவர்களுக்கு திருத்தந்தையின் இரங்கல்
மெரினா ராஜ் – வத்திக்கான்
மத்திய தரைக்கடல் பகுதியில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் இறந்த புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களது குடும்பத்தினர்க்கு தன் இதயப்பூர்வமான செபங்களை அர்ப்பணிப்பதாகவும், எல்லாம் வல்ல இறைவனின் வல்லமை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மீட்புப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு கிடைக்கப்பெற செபிப்பதாகவும் இரங்கல் தந்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன் 15 வியாழனன்று திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் கையொப்பமிட்டு கிரேக்கத்திற்கான திருப்பீடத்தூதர் பேரருள்திரு Jan Romeo Pawlowski அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இரங்கல் செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியதரைக் கடலில் இதுவரை நடந்த மிகப் பெரிய சோக நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கக்கூடிய இவ்விபத்தில் ஏறக்குறைய 79 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும், பெலோபொன்னீஸுக்கு தெற்கே மூழ்கிய மீன்பிடி கப்பலில் இருந்த நூற்றுக்கணக்கான மக்களைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
எல்லாம் வல்ல இறைவனிடம், பாதிக்கப்பட்ட மற்றும் மீட்புப்பணியில் ஈடுபடுவோருக்கு வல்லமை, விடாமுயற்சி மற்றும் நம்பிக்கையை இறைவன் கொடையாக வழங்க வேண்டி செபிப்பதாகவும் அவ்விரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளா திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் மீட்புப் படையினருக்குத் தன் செபத்தையும் வழங்கியுள்ளார்.
ஜூன் 14 புதன்கிழமை அதிகாலை பெலோபொன்னீஸுக்கு தெற்கே பன்னாட்டுக் கடற்பகுதியில் மூழ்கிய மீன்பிடி படகில் இருந்த நூற்றுக்கணக்கான மக்களைத் தேடும் மீட்பு நடவடிக்கை, இரவு முழுவதும் விமானங்கள் மற்றும் வானூர்திகளில் நடைபெற்ற நிலையில், அப்படகில் பயணித்தவர்கள் ஏறக்குறைய 600 முதல் 700 பேர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர்கள் லிபியாவை விட்டு வெளியேறியவர்கள் என்றும், குறிப்பாக பாகிஸ்தான், எகிப்து மற்றும் சிரியாவைச் சார்ந்தவர்கள் என்றும் தெரியவருகின்றது. இதுவரை 79 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், 8 சிறார் உட்பட 104 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இவ்விபத்தானது மத்தியதரைக் கடலில் இதுவரை நடந்த மிக மோசமான சோகங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்