இயேசுவின் முதல் சீடர்களைப் போல 'வலை கட்டுபவர்களாக' இருங்கள்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
வலைகள் மற்றும் ஒரு திசைகாட்டியை அடையாளப்படுத்தும் நற்செய்தியை கொண்டுள்ள நாம், அவற்றைப் பயன்படுத்துவதற்கான சிறந்த வழி குறித்து இப்போது உரையாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன் 1, இவ்வியாழனன்று, இலத்தீன் அமெரிக்க வணிக அமைப்பினருக்கு வழங்கிய உரையில் இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் கொண்டுள்ள நங்கூரம் என்னும் நம்பிக்கை, 'கடவுள் நம்மை வழிநடத்துகிறார்' என்ற நம்பிக்கையுடன் நாம் பயணிக்க உதவுகிறது என்றும் உரைத்தார்.
தொழிலாளர், இடம்பெயர்வு, காலநிலை மாற்றம் மற்றும் ஒருங்கிணைந்த மனித மேம்பாடு போன்ற நம் அனைவரையும் பாதிக்கும் சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க இலத்தீன் அமெரிக்காவிலிருந்து தொழில்முனைவோரை ஒன்றிணைக்கும் இந்த முயற்சிக்கு தான் நன்றி கூர்வதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஐரோப்பியத் தொழில்முனைவோர் குழுவிடம் தான் ஏற்கனவே கூறியது போல், சந்திப்பின் கலாச்சாரத்தில் நமது பணிகளை மையப்படுத்துவது கட்டாயமாகும் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தக் கலாச்சாரத்தின் மதிப்புகள் வணிக உலகத்தை ஊக்குவிப்பவையாகும் என்றும், இதனால் அது தீமையின் நிழல்களிலிருந்து தன்னைத் தானே தற்காத்துக் கொள்ள முடியும் என்றும் எடுத்துரைத்தார்.
இயேசுவின் முதல் சீடர்களான "வலை கட்டுபவர்கள்" போல் நாம் இருக்க வேண்டும் என்று அவர்களிடம் வேண்டுகோள் விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அச்சீடர்கள் மீனவர்களாகத் தங்கள் வர்த்தகத்தை நடத்த, வலுவான மற்றும் பயனுள்ள வலைகளை நெசவு செய்ய வேண்டியிருந்தது என்றும் எடுத்துக்காட்டினார்.
அதுபோலவே, உலகக் கடலையும், எழும் புயல்களையும் எதிர்கொண்டு, தொடரும் இலக்கை அடைய, அவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமெனவும், வலைகளை உருவாக்கி, ஒருவருக்கொருவர் உதவிட வேண்டுமெனவும் அவர்களிடத்தில் விண்ணப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எல்லோருக்குமான பணிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளதால், யாரையும் விட்டுவிடாமல் அனைவரையும் ஒன்றினைத்துச் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்