தேடுதல்

கிறிஸ்தவ ஒன்றிப்பு சபை முதுபெரும் தந்தையின் பிரதிநிகளுடன் திருத்தந்தை (கோப்புப்படம்) கிறிஸ்தவ ஒன்றிப்பு சபை முதுபெரும் தந்தையின் பிரதிநிகளுடன் திருத்தந்தை (கோப்புப்படம்)  (ANSA)

இயேசுவை பின்பற்றும் நாம், போர்களை விடுத்து அமைதியைத் தேடுவோம்

கிறிஸ்துவைப் பின்பற்றும் நாம், போரைவிடுத்து அமைதிக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

முழுமையான ஒன்றிப்பு என்பது தூய ஆவியாரின் கொடை என்பதையும், அவரின் வழித்துணையில் இவ்வொன்றிப்பு தேடப்பட வேண்டும் என்பதையும் நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 30, இவ்வெள்ளியன்று, கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபை முதுபெரும் தந்தையின் பிரதிநிகளைப் புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவையொட்டி திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒன்றிணைந்த பயணச் சூழலில், உலகளாவிய அளவில் திருஅவையின் ஒன்றிப்புப் பணியில் முதன்மையானதைச் செயல்படுத்துவதற்கான ஒரு முறையை ஒன்றாகத் தேட நாம் அழைக்கப்படுகிறோம் என்றும் தெரிவித்தார்.

விசுவாசிகளுக்கிடையேயான ஒன்றிப்பு என்பது விட்டுக்கொடுத்தல் மற்றும் சமரசங்கள் அல்ல, மாறாக, தாங்கள் இறைத்தந்தையின் அன்பான பிள்ளைகள் என்பதையும், கிறிஸ்துவின் ஆவியால் நிரப்பப்பட்டு, தங்கள் பன்முகத்தன்மையை ஒரு பெரிய சூழலில் அமைக்கும் திறன் கொண்டவர்கள் என்பதை ஒப்புக் கொள்ளும் சகோதரர்களுக்கிடையேயான சகோதரத்துவப் பணி என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

இதுதான் தூய ஆவியாரின் வழிமுறை என்பதை அறிந்துகொண்டவர்களாய் அவரிடம் அயராது மன்றாடுவோம், என்றும், நமது துயரங்கள் மற்றும் மகிழ்ச்சிகள், நமது வேதனைகள் மற்றும் நம்பிக்கைகள் என நாம் நம் இதயத்தில் சுமக்கும் அனைத்தையும் சகோதரர்களாக ஒருவரொருவருடன் பகிர்ந்து கொள்வோம் என்றும் தெரிவித்தார்.

நமது சந்திப்பின் சகோதரத்துவம், நமது கவலைகளைப் பகிர்ந்து கொள்ள வழிவகுக்கிறது, குறிப்பாக, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் அமைதிக்கான வழிகளைத் தேட அழைக்கிறது என்றுரைத்த திருத்தந்தை, போர் நம்மை அதிகம் பாதிக்கிறது என்றும், எல்லாப் போர்களுமே பேரழிவை ஏற்படுத்தி மக்களை நாட்டைவிட்டு வெளியேறவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்குகிறன்றன என்றும் சுட்டிக்காட்டினார்.

கிறிஸ்துவைப் பின்பற்றும் நாம், போரைவிடுத்து அமைதிக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், உண்மையிலேயே அமைதி என்பது நம்மால் அடையக்கூடிய ஒன்றல்ல, ஆனால், இது இறைவன் தரும் கொடை என்பதை நாம் உணர்ந்திட வேண்டும் என் றும், அதேவேளையில், கடவுளின் அமைதியை ஏற்படுத்தும் பணியில் பங்குகொள்ள அழைக்கப்பட்ட ஆண்களும் பெண்களும், குறிப்பாக விசுவாசிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு கொடையாக இது இருக்கின்றது என்பதையும் உணர்த்தினார் திருத்தந்தை

அமைதி என்பது போர் இல்லாததால் பிறக்கவில்லை, மனித இதயத்திலிருந்து எழுகிறது என்பதை நற்செய்தி நமக்குக் காட்டுகிறது என்று உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பேராசை, தனிப்பட்ட, சமூகம், தேசிய மற்றும் மத நிலைகளில் நமது சொந்த நலன்களைத் தொடர விரும்பும் சுயநல ஆசைகள் ஆகிய கசப்பான வேர்களே அமைதியின் வழியில் தடைகளாக இருக்கின்றன என்றும் விளக்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 June 2023, 15:31