தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் உடன் கியூபா நாட்டு அரசுத்தலைவர் Miguel Díaz-Canel Bermúdez திருத்தந்தை பிரான்சிஸ் உடன் கியூபா நாட்டு அரசுத்தலைவர் Miguel Díaz-Canel Bermúdez   (VATICAN MEDIA Divisione Foto)

திருத்தந்தையைச் சந்தித்த கியூப அரசுத் தலைவர்

1998ஆம் ஆண்டில் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் கியூபாவில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின் 25ஆம் ஆண்டு தற்போது நினைவுகூரப்படுகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

கியூபா நாட்டு அரசுத்தலைவர் Miguel Díaz-Canel Bermúdez அவர்கள், இச்செவ்வாய்க்கிழமை, ஜூன் 20ஆம் தேதி காலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கின் ஒரு சிறு அறையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, இரு தலைவர்களும் சிறிது நேரம் உரையாடியபின் தங்களுக்குள் பரிசுப் பொருட்களையும் பரிமாறிக் கொண்டனர்.

இவ்வாண்டின் அமைதி தினத்திற்கென எடுக்கப்பட்டிருந்த தலைப்பான ‘‘அமைதியின் தூதர்களாக இருங்கள்‘‘ என்ற வாசகம் எழுதப்பட்ட, அதேவேளை ஒலிவ கிளை தாங்கிய புறாவின் வடிவம் கொண்ட ஒரு வெண்கல கலைவடிவத்தையும், மனித உடன்பிறந்த நிலை குறித்த ஏடு ஒன்றையும் திருத்தந்தை அரசுத்தலைவருக்குப் பரிசாக வழங்க, வெள்ளி, வெண்கலம், மரம் ஆகியவைகளால் ஆன சிலையையும், கியூப நாட்டு கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய இரு பிரதிகளையும் திருத்தந்தைக்கு பரிசாக வழங்கினார் அரசுத்தலைவர் Miguel Díaz-Canel Bermúdez.

திருத்தந்தையுடனான சந்திப்புக்குப்பின், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின், நாடுகள் மற்றும் அனைத்துலக நிறுவனங்களுடன் உறவுகளுக்கானத் துறையின் நேரடிச்செயலர், பேரருட்திரு Daniel Pacho ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டார் கியூப அரசுத் தலைவர்.

திருப்பீடச் செயலருடனான கலந்துரையாடலின்போது, கியூபாவிற்கும் திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், 1998ஆம் ஆண்டில் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் கியூபாவில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின் 25ஆம் ஆண்டு தற்போது நினைவுகூரப்படுவது, தலத்திருஅவையின் பிறரன்புப்பணிகள், இன்றைய உலகின் நிலைகள் ஆகியவை விவாதிக்கப்பட்டதாக திருப்பீடத் தகவல்துறைத் தெரிவிக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 June 2023, 14:18