தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

தூய ஆவியானவரின் செயல்பாடுகளுக்கு வாழ்வைக் கையளித்தல்

ஒவ்வொருவரையும் இயேசுவின் கண்களால், அன்பால், மென்மையால் பார்க்க தூய ஆவியானவர் உதவட்டும்

மெரினா ராஜ் – வத்திக்கான்

தூய ஆவியானவரின் செயல்பாடுகளுக்குத் தங்களைக் கையளிக்கும் அருள்பணியாளர்களின் ஆன்மிக வாழ்க்கை வளர்கிறது என்றும், இதனால் போலித்தனம் அழிக்கப்பட்டு ஆவியின் வெளிச்சத்திற்கு அனைத்து செயல்களும் கொண்டு வரப்பட்டு நமது காயங்கள் அனைத்தும் ஆற்றப்படுகின்றன என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பரிந்து பேசும் தூயஆவியார் ஊழியர் சபையின் (Servants of the Holy Paraclete)  பொதுப்பேரவையை முன்னிட்டு அதன் உறுப்பினர்களை ஜூன் 24, சனிக்கிழமை வத்திக்கானில் சந்தித்த போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துறவறம், மனமாற்றம், புதுப்பிக்கப்பட்ட ஆன்மிக மற்றும் அர்ப்பணத்துடன் வாழவும் அச்சபையினர்க்கு வலியுறுத்தினார்.

சபையின் தனிவரமானது, துறவற அர்ப்பணிப்பு மற்றும் செபத்தை வலுப்படுத்துகின்றது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடன்வாழும் அருள்பணியாளர்களுடன் இணைந்து, ஆன்மிக வாழ்க்கையின் முதன்மையை மீண்டும் கண்டறிய ஒவ்வொரு நாளும் அழைக்கப்படுகிறார்கள் என்றும் எடுத்துரைத்தார்.

நல்ல சமாரியனின் சாயல் மற்றும் ஆற்றலுடன் உடன்பணியாளர்களின் அருகில் நின்று அவர்களுடன் வாழ்வை, செபத்தைப் பகிர்ந்து வாழுங்கள் என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக துறவற வாழ்வில் இணக்கத்தை ஏற்படுத்தும் செபத்தில், குழுவாக இணைந்து வாழுங்கள் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அமைதியான மற்றும் மறைவான பணியில் இயேசு கிறிஸ்துவின் உருவமாக, முழுமையான இறையன்பின் மறைபொருளாக விளங்கும் இரக்கமுள்ள தந்தைக் கடவுளின் முகமாக விளங்க, ஒவ்வொரு நாளும் அழைக்கப்படுவதையும், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்த கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார் (உரோ 5:8) என்ற திருத்தூதர் பவுலின் வார்த்தைகளையும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வொருவரையும் இயேசுவின் கண்களால், அன்பால், மென்மையால் பார்க்க தூய ஆவியானவர் உதவட்டும் என்றும், இரக்கத்தின் நற்செய்தியின் சாட்சிகளாக மேற்கொள்ளும் பயணத்தில் அன்னை மரியா தனது மென்மை, அன்பு மற்றும் பாசத்தின் புரட்சிகரமான ஆற்றலைத் தருவாராக என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 June 2023, 12:20