தேடுதல்

சித்ரவதைகளை நிறுத்தி, மனித மாண்பை உயர்த்திப் பிடிக்க வேண்டும்

சித்ரவதைப்படுத்தல்கள் உலகம் முழுவதும் நிறுத்தப்படவேண்டும் - ஜூன் மாதத்திற்கான செபக்கருத்தில் அழைப்புவிடுக்கும் திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அனைத்து வகையான சித்ரவதைப்படுத்தல்களும் உலகம் முழுவதும் நிறுத்தப்படவேண்டும் என ஜூன் மாதத்திற்கான தன் செபக்கருத்தில் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

அனைத்திற்கும் மேலாக மனிதனின் மாண்பு தூக்கிப் பிடிக்கப்பட வேண்டும் என்பதை தன் செபக்கருத்தில் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சித்ரவதைகள் என்னும் பெருங்கொடுமையை உடனடியாக நிறுத்துவோம் என விண்ணப்பித்துள்ளார்.

சித்ரவதைகள் என்பது கடந்த கால வராலாறு அல்ல, மாறாக நிகழ்கால வரலாற்றின் ஒரு பகுதி என தன் செபக்கருத்தில் கோடிட்டுக் காட்டியுள்ள திருத்தந்தை, இவ்வளவு பெரிய அளவில் சிதரவதைகள் இடம்பெறவுள்ள அளவிற்கு மனிதனின் சக்தி உள்ளதா என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார்.

பல சித்ரவதைகள் மிகக்கொடூரமாக இருக்கின்ற அதேவேளை, மனித மாண்பை இழக்கவைக்கும் நிகழ்வுகளும், மனிதாபிமானமற்ற நிலைகளும் தொடர்ந்து இடம்பெறுகின்றன என திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.

இயேசுவும் கொடுமைப்படுத்தப்பட்டு சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் நாம் ஒவ்வொருவரும் சித்ரவதைகளை தடுத்தி நிறுத்தி மனித மாண்பை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என கூறியுள்ளார் திருத்தந்தை.

மனித மாண்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லையெனில், மனிதர்கள் பொருட்களாக நடத்தப்பட்டு இரக்கமற்ற செயல்களுக்கு உட்படுத்தப்படுவார்கள், அதுவே மரணத்திற்கும் வாழ்நாள் அளவிலான உடல் மற்றும் உளரீதியான பிரச்சனைகளுக்கும் இட்டுச் செல்லலாம் எனவும் தன் கவலையை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை, ஜூன் மாதத்திற்கான தன் செபக்கருத்தில்.

சித்ரவதைகளை முற்றிலுமாக ஒழிப்பதில் அனைத்துலக சமுதாயம் முழுமுயற்சி எடுத்து உழைக்க வேண்டும் எனவும், சித்ரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் முழு ஆதரவையும் உதவியையும் வழங்கவேண்டும் எனவும், நாமனைவரும் இறைவேண்டல் செய்வோம் என தன் செய்தியில் இறுதியாக அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 May 2023, 15:10