மரியன்னை பெயரிலான பெனடிக்டைன் துறவு இல்லத்தின் ஜுபிலி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இத்தாலியின் Benevento மாவட்டத்தில் Montevergine பகுதியில் அமைந்துள்ள அன்னைமரியா துறவு இல்லத்தின் 9ஆம் நூற்றாண்டு கொண்டாட்டங்களையொட்டி தன் சிறப்புச் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இம்மாதம் 28ஆம் தேதி பெந்தகோஸ்து ஞயிறு திருவிழாவின்போது தன் 9ஆம் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் புனித மரியன்னை பெயரிலான பெனடிக்டைன் துறவு இல்லத்திற்கு திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரொலின் தலைமையில் ஒரு குழுவை நியமித்து, அவர்கள் வழி தன் ஆசீரை அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
ஏறக்குறைய 1120ஆம் ஆண்டு Vercelli யின் வில்லியம் என்பவர் Montevergine என்ற பகுதியில் துறவு இல்லம் ஒன்றைத் துவக்கி அதனை அன்னை மரியாவுக்கென அர்ப்பணித்தார்.
அன்னை மரியா பெயரிலான இத்துறவு இல்லத்தின் ஒன்பதாம் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களையொட்டி கர்தினால் பரோலின் வழி செய்தி ஒன்றை வழங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்துறவு மடத்தின் அனைத்துத் துறவியருக்கும், அப்பகுதி அரசு அதிகாரிகளுக்கும், விசுவாசிகளுக்கும் தன் செபத்தையும் ஆசீரையும் அனுப்புவதாக எழுதியுள்ளார்.
அன்னை மரியா மீதான பக்தி முயற்சிகளின் வழி தெய்வீக அருள் கிட்டுவது குறித்தும் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு துன்பநிலைகளில் துயருறும் மக்களுக்கு அமைதியையும் மகிழ்வையும் பெற்றுத் தருவதில் அன்னை மரியாவின் பங்களிப்பு சிறப்பிடம் பெறுகிறது எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மோந்தேவெர்ஜினே துறவு இல்லத்தின் இந்த ஜுபிலி கொண்டாட்டங்கள் நல்ல கனிகளை துறவிகளிடமும் விசுவாசிகளிடமும் உருவாக்க வேண்டும் என ஒரு தந்தைக்குரிய அக்கறையுடன் தான் செபிப்பதாகவும், கர்தினால் பரோலின் அவர்களுக்கு அனுப்பியுள்ளக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்