தேடுதல்

ஹங்கேரிய இயேசு சபையினருடன் உரையாடும் திருத்தந்தை ஹங்கேரிய இயேசு சபையினருடன் உரையாடும் திருத்தந்தை   (ANSA)

மேய்ப்புப் பணியில் முன்னோக்கிச் செல்லுங்கள் : திருத்தந்தை

ஒரு சகோதரனைத் திருத்துவது போல் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் திருத்தப்பட வேண்டும் : திருத்தந்தை பிரான்சிஸ்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இளையோருக்கு நிலையான சான்றுகள் தேவைப்படுகின்றன என்று தனது திருத்தூதுப் பயணத்தின்போது ஹங்கேரிய இயேசு சபையாளர்களிடம்  திருத்தந்தை பிரான்சிஸ் கூறியதாகத் தெரிவித்துள்ளது 'La Civiltà Cattolica' என்ற இயேசு சபையினரின் பத்திரிகை

ஏப்ரல் 29, சனிகிழைமையன்று, ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரிலுள்ள திருப்பீடத்தூதர் இல்லத்தில் தனது இயேசு சபைத் தோழர்களைத் திருத்தந்தை பிரான்ஸ் அவர்கள் சந்தித்தபோது அவர்களுடன் நிகழ்ந்த கலந்துரையாடலை மே 9, இச்செவ்வாயன்று 'La Civiltà Cattolica' என்ற இயேசு சபை பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இச்சந்திப்பின் போது கேள்விகள் பரந்துபட்ட அளவில் இருந்தபோதிலும், பலர் இளைஞர்கள் மற்றும் இளங்குருமடத்தில் உள்ளவர்களுக்கு எவ்வாறு சரியாகப் பணியாற்றுவது என்பது குறித்து கேள்விகள் எழுப்பினர் என்றும் அப்பத்திரிகை கூறியுள்ளது.

இளையோருக்கு எவ்வாறு பணியாற்றுவது என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஒரு நிலையான முன்மாதிரியான சான்று வாழ்வை இளையோருக்கு வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோரை உருவாக்கும் பயிற்சியில், குழந்தைகளிடம் பேசுவதைப்போல அல்ல, பெரியவர்களிடம் பேசுவதைபோல் அவர்களிடம் பேசவேண்டும் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித இனிகோவின் ஆன்மிகப் பயிற்சிகளின் சிறந்த ஆன்மிக அனுபவத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மன்னிக்க முடியாத பாலியல் முறைகேடு செய்த ஒருவரை எதிர்கொள்ளும்போது, அவரிடத்தில் கடவுளின் பரிவிரக்கத்தை எவ்வாறு வெளிப்படுத்தி வாழ்வது என்ற கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாலியல் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் உட்பட அனைவருக்கும் கடவுளின் பரிவிரக்கம் நிறைந்த அன்பு இருக்கிறது என்றும், எப்படியிருப்பினும், அவர்களுக்குத் தேவையான தண்டனைகளை வழங்குவதன் வழியாக இது ஒப்புரவாக்கப்பட வேண்டும் என்பதையும், ஒரு சகோதரனைத் திருத்துவது போல் அவர்கள் திருத்தப்பட வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 May 2023, 14:59