நாத்சி வதை முகாமிலிருந்து தப்பியவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நண்பரும் யூதப் படுகொலையிலிருந்து தப்பியவரும் எழுத்தாளருமான Edith Bruck அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
92 வயதான Edith Bruck அவர்களுக்கு அனுப்பியுள்ள பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில், உங்களின் பணி இளையோருக்கு, இலட்சியத்திற்காகப் போராடுவதன் முக்கியத்துவத்தைப் பற்றிச் சொல்கிறது" என்றும் கூறியுள்ளார்.
2021 -ஆம் ஆண்டில், வத்திக்கான் நகரத்தின் தினசரி நாளிதழான L’Osservatore Romano, பெரும் யூத இன அழிப்பு (Holocaust) நினைவு தினத்திற்காக திருமதி ப்ரூக்குடன் ஒரு நேர்காணலை நடத்தியது. திருத்தந்தை பிரான்சிஸ் அந்த நேர்காணலைப் படித்து, மிகவும் நெகிழ்ந்துபோய், அவரைச் சந்திக்கும்படி கேட்டுக் கொண்டார்.
ஒரு மாதத்திற்குப் பிறகு, உரோமையுள்ள அவரது குடியிருப்பிற்குச் சென்று, "உங்கள் சாட்சியத்திற்கு நன்றி தெரிவிக்கவும், நாத்சிகளால் கொல்லப்பட்ட உங்கள் மக்களுக்கு மரியாதை செலுத்தவும்" வந்திருப்பதாகக் கூறினார் திருத்தந்தை.
அதன் பிறகு, கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் பரிசுகளை பரிமாறிக் கொண்ட இவர்கள் இருவருக்குமிடையே நட்பு ஏற்பட்டது. ஓராண்டு கடந்து, திருமதி ப்ரூக் திருத்தந்தையைச் சந்திக்க வத்திக்கான் வந்தார். மேலும் அவர்களின் சந்திப்பைப் பிரதிபலிக்கும் விதமாக ‘Sono Francesco’ அதாவது, ‘நான் பிரான்சிஸ்' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதினார், அதற்குத் திருத்தந்தை முன்னுரை எழுதியிருந்தார்.
இவ்விருவரின் இரண்டாவது சந்திப்பைத் தொடர்ந்து, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது, அவர்களின் உரையாடல், இளைய தலைமுறையினருக்குக் கடந்த காலத்தின் நினைவலைகளைப் பகிர்வதில் கவனம் செலுத்தியுள்ளது என்றும், கடந்த காலத்தின் துயரங்களையும் வேதனைகளையும் எடுத்துக்காட்டும் அதேவேளையில், மீண்டும் இப்படியொரு துயரம் நிகழ்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணங்களும் அவர்களின் உரையாடலில் அடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
யூதப் படுகொலையிலிருந்து தப்பியவரும் எழுத்தாளருமான Edith Bruck ஹங்கேரிய யூத பெற்றோருக்கு 1931 இல் பிறந்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்