பிறரன்பு பணிகள்தாம் நமது கிறிஸ்தவ வாழ்வின் மையம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பிறரன்பு பணிகள் அன்பில் ஊற்றெடுக்கிறது. அன்பு நம்மை மற்றவர்களை விட மேலே வைக்காது, ஆனால், அவர்களை மரியாதையுடனும் இரக்கத்துடனும், இளகிய மனதுடனும் அணுகவும், அவர்களின் பலவீனங்களை அறிந்து புரிந்துகொள்ளவும் நம்மை அனுமதிக்கிறது என்று கூறினார் திருத்தந்தை.
மே 11, இவ்வியாழனன்று, அனைத்துலக காரித்தாஸ் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வமைப்பு திருஅவையின் மூலத்திலிருந்தும் கிறிஸ்துவின் இறுதி இரவு உணவிலிருந்து தனக்கான கொடையாகக் கொண்டு இதனை நிறைவேற்றுகிறது என்றும் கூறினார்
நற்கருணை நமக்கானது
நற்கருணை நமக்கானது. உணவும் பானமும்தான் நம் பயணத்தில் நம்மைத் தாங்கி, நம் சோர்வில் நம்மைப் புத்துணர்ச்சியூட்டுகிறது, நாம் விழும்போது நம்மை எழுப்புகிறது என்றும், கடவுள் நமக்காகவும் நம் மீட்பிற்காகவும் செய்த அனைத்தையும் சுதந்திரமாக ஏற்றுக்கொள்ள நம்மை அழைக்கிறது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு நற்கருணையின் அடையாளமாகவும் கருவியாகவும் மாறுவதன் வழியாகக் கடவுள் நம்மீது வைத்திருக்கும் அன்பை ஈடுசெய்ய முடியும் என்றும், நாம் பெற்றதை மற்றவர்களுக்குக் கொடுப்பதை விட, நற்கருணையின் அர்த்தத்தை நாம் புரிந்துகொள்கிறோம் என்பதை கடவுளுக்குக் காட்ட சிறந்த வழி எதுவுமில்லை என்றும் தெளிவுபடுத்தினார் திருத்தந்தை.
அனைத்துலகக் காரித்தாஸின் அடையாளம் என்பது, அது பெற்றுக்கொண்ட பணியை நேரடியாகச் சார்ந்திருப்பதால், அதன் தோற்றுவாயான கடவுளின் அன்பிற்குத் திரும்புவது முக்கியம் என்று வலியுறுத்தி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமூகத் துறையில் பணிபுரியும் பிற நிறுவனங்களிலிருந்து அதை வேறுபடுத்துவது அதன் திருஅவையின் அழைப்பாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
பிறரன்பு பணிகள்தாம் கிறிஸ்தவ வாழ்வின் மையம்
பிறரன்பு பணிகள்தாம் நமது கிறிஸ்தவ வாழ்வின் மையம் என்றும், நாம் கடவுளின் அன்பை ஏற்றுக்கொள்கிறோம், அவரில் ஒருவரையொருவர் அன்புகூரும்போது, தனிநபர்களாகவும், திருஅவையாகவும், நமது அடையாளத்தின் ஆழத்தையும், நமது இருப்பின் அர்த்தத்தையும் ஆழமாக்குகிறோம் என்பதை உணர்ந்துகொள்வோம் என்றும் கூறினார் திருத்தந்தை.
மேலும் நமது சொந்த வாழ்க்கை எவ்வளவு முக்கியம் என்பது மட்டுமல்ல, மற்றவர்களின் வாழ்க்கையும் எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை நாம் புரிந்துகொள்கிறோம் என்றும், ஒவ்வொரு உயிரும் எவ்வாறு தனித்துவமானது மற்றும் பிரிக்க முடியாதது, கடவுளின் பார்வையில் இதுவொரு அற்புதம் என்பதை நாம் தெளிவாக உணர்கிறோம் என்றும் விவரித்தார் திருத்தந்தை.
உலகளாவியத் திருஅவையுடன் ஒன்றித்திருங்கள்
முதலாவதாக, விதைகளை விதைப்பதிலும், நற்செயல்கள் வழியாக நற்செய்தியை அறிவிப்பதிலும் உலகளாவிய திருஅவையுடன் ஒத்துழைப்பதே உங்கள் முதல் பணியாக இருக்க வேண்டும் என்று உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காரித்தாஸில் பணியாற்றும் அனைவரும் உலகத்தின் முன் அன்பிற்கு சாட்சியாக வாழ்வதற்கு அழைக்கப்படுகிறார்கள் என்றும், மறைபரப்பு பணியின் சீடர்களாக இருந்து கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.
தலத்திருஅவைகளுடன் ஒன்றித்திருங்கள்
இரண்டாவதாக, மேய்ப்புப் பணிக்கான தீவிர அர்ப்பணிப்பில் தலத்திருஅவைகளுடன் இணைந்து செல்ல நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் செய்தியை அரசியல் மற்றும் சமூக வாழ்க்கைக்குக் கொண்டு செல்லும் திறமையான பொதுநிலையினருக்குப் பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்துங்கள் என்றும் அறிவுறுத்தினார்.
ஒருவர் ஒருவருடன் ஒன்றித்திருங்கள்
மூன்றாவதாக, ஒன்றித்தலை உங்களுக்குப் பரிந்துரைக்க விரும்புகின்றேன் என்றும், உங்கள் கூட்டமைப்பு பல்வேறு அடையாளங்களைத் தழுவும் நிலையில் உங்கள் பன்முகத்தன்மையை ஒரு கருவூலமாகவும், பன்மைத்துவத்தை வளமாகவும் அனுபவியுங்கள் என்றும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒருவருக்கொருவர் மரியாதை காட்டுவதில் போட்டியிடுங்கள், மேலும் கருத்துவேற்றுமைகள் பிரிவதற்கு அல்ல, மாறாக, சந்திப்பதற்கும் வளர்ச்சிக்கும் வழிவகுக்கின்றன என்பதை உணர்ந்திடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்