தேடுதல்

சூடானிலிருந்து போரால் வெளியேற முனையும் மக்கள் சூடானிலிருந்து போரால் வெளியேற முனையும் மக்கள்  (ANSA)

மோதல்களையும் வன்முறைகளையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலை தவிர்ப்போம்

திருத்தந்தை பிரான்சிஸ் : மோதல்களுக்கும், வன்முறைகளுக்கும், போருக்கும் நம்மை நாம் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டாம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

உள்நாட்டு மோதல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் சூடான் நாட்டில் அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கவும், பல்வேறு துன்பங்களை அனுபவித்துவரும் உக்ரைன் நாட்டின் பக்கம் அனைவரும் ஒன்றிணைந்து எழுந்து நிற்கவேண்டும் எனவும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

மே 21, ஞாயிற்றுக்கிழமையன்று அல்லேலுயா வாழ்த்தொலியுரை வழங்கியபின்னர் இவ்விண்ணப்பத்தை முன்வைத்த திருத்தந்தை, மோதல்களையும் வன்முறைகளையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு நம்மை நாம் தள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொண்டார்.

சூடானில் போரிடும் தரப்புகள் தங்கள் ஆயுதங்களை கைவிடவேண்டும் என மிக ஆழமான விண்ணப்பம் ஒன்றை விடுத்த திருத்தந்தை அவர்கள், நாட்டில் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் எனவும், நாட்டு மக்களின் துன்பதுயரங்கள் விலகவேண்டும் எனவும் அனைத்துலக சமுதாயமும் உதவவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

முழுமையாக இல்லையெனினும் பகுதியளவு அமைதி ஒப்பந்தம் இடம்பெற்றுள்ள நிலையில் அது குறித்து தன் ஊக்கத்தையும் வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு மாதமாக இடம்பெறும் வன்முறைகளால் நிலைமை சீர்கேடடைந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

மோதல்களுக்கும், வன்முறைகளுக்கும், போருக்கும் நம்மை நாம் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார்  திருத்தந்தை  பிரான்சிஸ்.

உக்ரைன் நாட்டு மக்களின் சார்பாக அனைவரும் அவர்களுக்கு பக்கபலமாக இருப்போம் என்ற அழைப்பையும் முன்வைத்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 May 2023, 14:38