தேடுதல்

மே மாதத்திற்கான திருத்தந்தையின் செபக் கருத்து

திருஅவை இயக்கங்களும், அமைப்புகளும், அதன் நற்செய்தி அறிவிப்புப் பணியில் தங்களின் உரையாடல் திறனைப் புதுப்பிக்கின்றன : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருஅவை இயக்கங்களும், அமைப்புகளும், தமது நற்செய்தி அறிவிப்புப் பணியை மீண்டும் கண்டுணர்ந்து தங்களின் தனி வரங்களை முன்னிறுத்தி பணியாற்றவேண்டுமென நாம் இறைவேண்டல் செய்வோம் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 2, இச்செவ்வாயன்று, தான் வெளியிட்ட மே மாதத்திற்கான செபக் கருத்தைக் கொண்ட காணொளிக்காட்சியில் இவ்வாறு உரைந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறந்ததொரு கொடையாகவும், கருவூலமாகவும் திகழும் திருஅவை இயக்கங்களையும், அமைப்புகளையும் தனது செபத்தில் அர்ப்பணிப்பதாகவும் கூறியுள்ளார்.

இவ்விரு இயக்கங்களும் திருஅவையில் அதன் நற்செய்தி அறிவிப்புப் பணியில் தங்களின் உரையாடல் திறனைப் புதுப்பிக்கின்றன என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு குழுவிற்கும் அதற்கென்றே உரிய தனித்துவம் உள்ளது என்றும், இது நற்செய்தி அறிவிப்பின் அழகு மற்றும் புதுமை இரண்டையும் நிரூபிக்க அனுமதிக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இவ்விரு இயக்கங்களின் தனித்துவம் ஒவ்வொன்றும் வேறுபட்டது என்றும், பல்வேறு குழுக்களையும் இயக்கங்களையும் குறிக்கும் இந்தப் படைப்பாற்றலுக்கு நன்றி என்றும் விளக்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவைகள் வெவ்வேறு மொழிகளைப் பேசுவது போல் தோன்றினாலும், தங்களைப் புரிந்துகொள்வதன் வழியாக, அவற்றையும் புரிந்துகொள்ளும் ஆற்றல் பெறுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

அதேவேளையில், ஆயர்கள் மற்றும் பங்குத்தளங்களின் பணியில், தொடர்ந்து பணியாற்ற அவர்களை அழைப்பதன் வழியாக, தங்களைத் தாங்களே சோதனைக்கு ஆட்படுத்திக்கொள்வதைத் தவிர்க்குமாறும் எச்சரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்றைய உலகில் நிலவும் சவால்களுக்குத் தூய ஆவியாரின் தூண்டுதலுக்குப் பதிலளிப்பதன் வழியாக, எப்போதும் இயக்க நிலையில் இருங்கள் (be on the move) என்றும், அதேவேளையில், திருஅவையுடன் நல்லிணக்கம் கொண்டிருங்கள், ஏனென்றால், நல்லிணக்கம் என்பது தூய ஆவியாரின் கொடை என்றும், அவர்களை ஊக்கப்படுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 May 2023, 14:40