தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

போர்கள் அமைதியைத் தருவதில்லை : திருத்தந்தை

‘அவனியில் அமைதி’ என்ற திருமடல் வெளியாகி 60 ஆண்டுகளைக் கடந்தும் கூட, அமைதி எவ்வளவு அவசியம், அது எவ்வளவு நன்மையைத் தருகிறது என்பதை மனிதகுலம் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

போர்கள்  மனிதர்களின் வாழ்வில் நிம்மதியைத் தந்ததில்லை, வரலாற்றில் அவர்களின் பாதையை வழிநடத்தவோ, அவர்களின் நடவடிக்கைகளில் எழுந்த மோதல்களையும் எதிர்ப்புகளையும் தீர்க்கவோ முடிந்ததில்லை என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 11, இவ்வியாழனன்று, 'மக்களுக்கு அமைதி' என்ற தலைப்பில் திருத்தந்தை புனித 23-ஆம் ஜான் எழுதிய ‘அவனியில் அமைதி’ என்ற திருமடலை வெளியிட்ட 60-ஆம் ஆண்டின் நினைவாக, இலாத்தரன் பாப்பிறைப் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் அனைத்துல மாநாட்டிற்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திருமடல் அமைதியைக் கட்டியெழுப்புவது எப்படி என்பதை நினைவுபடுத்தும் நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான செய்திகளைக் கொண்டுள்ளது என்றும், உண்மை, நீதி, அன்பு மற்றும் சுதந்திரம் ஆகியவற்றைச் சுருக்கமாகக் கூறும் உண்மையான மனித விழுமியங்களால் ஈர்க்கப்பட்ட கொள்கையை கட்டமைப்பதற்கான அர்ப்பணிப்புகளைச் சுரக்கமாகக் கூறுகின்றது என்றும் தெரிவித்தார்.

இந்தத் திருமடல் வெளியாகி 60 ஆண்டுகளைக் கடந்தும் கூட,  அமைதி எவ்வளவு அவசியம், அது எவ்வளவு நன்மையைத் தருகிறது என்பதை மனிதகுலம் சரியாகப் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை என்று கவலை தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும் நமது  அன்றாட வாழ்க்கையைப் பார்க்கும்போது, உண்மையில் ஒரு சிலரின் சுயநலமும், பெருகிய வரம்புக்குட்பட்ட நலன்களும், எத்தனையோ பிரச்சனைகள் அல்லது புதிய தேவைகளுக்கு ஆயுதங்கள் வழியாகத்தான் தீர்வைக் காணமுடியும் என்ற எண்ணத்தைத் தூண்டுகினறன என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

பாதுகாப்பை நிர்வகிப்பதற்கும் அமைதியை உறுதிசெய்வதற்கும் மாநிலங்கள் உருவாக்கிய பலதரப்பு கட்டமைப்புகளின் ஆழமான சீர்திருத்தம் தேவை என்றும், ஆனால், அவை இப்போது சுதந்திரம் மற்றும் செயல்பாட்டின் சாத்தியத்தை இழந்துள்ளன என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும் உறுதியான செயல்களை ஊக்குவிக்கும் மற்றும் செயல்படுத்தும் தன்னாட்சி திறன் இல்லை என்றால் அமைதியை அறிவிப்பது மட்டுமே பயன்தராது, காரணம் பொது நலனுக்காகப்  பணியாற்றாமல், வெறுமனே பாகுபாடான கருவிகளாக இருக்கும் நிலைக்கு நம்மை ஆட்படுத்திவிடும் என்றும் எச்சரித்தார்.

ஒரு உண்மையான அறிவியல் உருவாக்கம் என்பது, ஆழமான ஆய்வு மற்றும் ஆராய்ச்சி, மேம்படுத்தல்கள் மற்றும் நடைமுறை பயிற்சிகளின் பலனாகும் என்று விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது புதிய எல்லைகளைத் திறக்கவும், காலம்கடந்த  கற்பித்தல் மற்றும் நம் காலத்திற்கு ஒவ்வாத நிறுவன வடிவங்களைச் சரிசெய்யவும் பயணிக்க வேண்டிய பாதையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 May 2023, 15:21