தேடுதல்

2023.05.27 Santo Spirito Pentecoste

கிறிஸ்துவில் வாழும் தூய ஆவியை சுமந்து செல்லுங்கள்: திருத்தந்தை

"படைப்பாற்றல் வலிமைகொண்டு, கடவுளை நோக்கியும் மற்றவர்களை நோக்கியும் ஓடுங்கள், ஆனால் ஒன்றாக இணைந்து ஓடுங்கள்" - திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மதமாற்றத்திலிருந்து அப்போஸ்தலிக்க நடவடிக்கையை வேறுபடுத்துவதில் மிகவும் கவனமாக இருங்கள் என்றும், நாம் மதமாற்றம் செய்வதில்லை, இறைவன் ஒருபோதும் மதமாற்றம் செய்யவில்லை என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 29, இத்திங்களன்று, புனித பவுலின் ((Barnabites)) திருநிலையினர் மற்றும் புனித அந்தோனி மேரி சக்கரியாஸின் ஆன்மிகக் குடும்பத்தினருக்கும் வழங்கிய உரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மூன்று தலைப்புகளின் அடிப்படையில் அவர்களுடன் தனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

கடவுளை நோக்கி ஓடுதல்

பந்தயத்திடலில் ஓட வந்திருப்போர் பலர் ஓடினாலும் பரிசு பெறுபவர் ஒருவரே. இது உங்களுக்குத் தெரியாதா? எனவே, பரிசு பெறுவதற்காகவே நீங்களும் ஓடுங்கள் என்றும், நான் குறிக்கோள் இன்றி ஓடுபவரைப்போல ஓடமாட்டேன். காற்றைக் குத்துபவரைப்போலக் குத்துச் சண்டை இடமாட்டேன் (காண்க. 1 கொரி 9:24-27), என்றும் கூறிய புனித பவுலடியாரின் வார்த்தைகளை எடுத்துக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு நம்மிடையே ஒப்படைக்கப்பட்ட மக்களை இந்த ஓட்டப்பந்தயத்தில் ஈடுபடுத்தவும் முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

மத மாற்றத்தின் வழியாக அல்ல மாறாக, கடவுளுடனான நமது தனிப்பட்ட அனுபவங்கள் வழியாகவே நமது நற்செய்தி அறிவிப்புப் பணியை சிறப்பாக செய்திட முடியும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மற்றவர்களை நோக்கி ஓடுதல்

இரண்டாவதாக, மற்றவர்களை நோக்கி ஓடுதல் என்பதும் மிகவும் அடிப்படையானது என்பதை சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  உண்மையில், நம் நம்பிக்கையின் வாழ்வில், நற்செய்தி அறிவிப்பின் உண்மைப்பொருளை நாம் இழந்தால், நாம் நம்மையே மூடிக்கொண்டு, சுய-குறிப்புகளின் பாழான நிலங்களில் வறண்டு போவோம் என்றும் எச்சரித்தார்.

கிறிஸ்துவின் 'வாழும்' ஆவி என்பது இதயத்தை வெல்வது, இது உங்களை உங்கள் நாற்காலியில் உட்கார வைக்காது, ஆனால், உங்கள் சகோதரர் சகோதரிகளிடம், கருணை நிறைந்த பார்வையுடன் உங்களை வெளியே செல்ல வைக்கிறது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

ஒரே ஒரு நற்செய்தியைப் பரப்புவதற்கான பொருத்தமான வழிகளைக் கண்டறிய, நெகிழ்வான மனங்களும் திறந்த மனங்களும், மற்றும் ஆராய்ச்சியின் பகிர்வுப் பாதைகளும் தேவைப்படும் என்றும், மாறிவரும் உலகில், கிறிஸ்துவின் இந்த வாழும் ஆவியை எல்லா இடங்களிலும் எடுத்துச் செல்லுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

பைத்தியம் பிடித்தவர்போல் ஓடுதல்

பைத்தியம் பிடித்தவர்போல் ஓடுதல் என்பது வெறித்தனமாக ஓடுவதைப் போன்றது அல்ல, மாறாக இது வேறுபட்டது, அதாவது, படைப்பாற்றல் வலிமை (creative courage) கொண்டு ஓடுவது என்பதை குறிக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது என்றும் விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நற்செய்தியின் அதிநவீன நுட்பங்களை விரிவுபடுத்துவது அவ்வளவு முக்கியமல்ல, மாறாக, புனித பவுலடியார் கூறுவதுபோன்று, "வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவனானேன். எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன் (1 கொரி 9:22) என்பதை எடுத்துக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிரமங்களின் முகம் மற்றும் பழக்கம் மற்றும் அமைதியான வாழ்க்கையின் எல்லைகளுக்கு அப்பால் பார்ப்பது என்பதை இது குறிக்கிறது என்றும் கூறினார்.

ஒன்றிணைந்து பணியாற்றுவது (Doing together)

ஒன்றிணைந்து பணியாற்றுவது என்பது, சண்டை சச்சரவுகள், விவாதங்கள் மற்றும் சுயநலத்தால் பிளவுபட்ட உலகில், திருத்தூதர்களின் வாழ்க்கையில் விளங்கிய ஒன்றிப்புக்குச் சான்றுபகரவும் அதை மற்றவர்களுக்கு வழங்கவும் நீங்கள் அழைக்கப்பட்டுள்ளீர்கள் என்றும் எடுத்துக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமது ஆண்டவர் இயேசு தனது இறைவேண்டலில் வெளிப்படுத்திய ‘எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக!’ (காண்க யோவா 17:21) என்பது இந்த ஒன்றித்தலின் மையமாக விளங்குகிறது என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 May 2023, 14:19