திருஅவையின் வருங்காலத்திற்கு குடும்பங்களின் நலவாழ்வு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
உலகம் மற்றும் திருஅவையின் வருங்காலத்திற்கு குடும்பங்களின் நலவாழ்வு இன்றியமையாதது என்பதை மனதில் கொண்டவர்களாக உலகின் அனைத்துக் கத்தோலிக்க பல்கலைக்கழகங்களின் ஆய்வு மையங்களிலும் குடும்பங்களின் மேய்ப்புப்பணி சார்ந்த ஆய்வுகளும் கலந்துரையாடல்களும் இடம்பெறவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலகம் மற்றும் திருஅவையின் வருங்காலத்திற்கு குடும்பங்களின் நலவாழ்வு இன்றியமையாதது என Amoris Laetitia சுற்றுமடலில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதை, உலக குடும்பங்களின் நெருக்கத்தை ஊக்குவிக்கும் துறையினருக்கு வழங்கியச் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்துறையினரின் துவக்க விழாவுக்கு தன் வாழ்த்துக்களையும் அனுப்பியுள்ளார்.
இன்றைய குடும்பங்களும் அவை சந்திக்கும் சவால்களும் குறித்த ஆய்வுகளை நடத்தியதன் வழி, பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வுக்கான திருப்பீட அவையும், சமூக அறிவியலுக்கான பாப்பிறைக் கழகமும் இணைந்து உருவாக்கிய இத்துறையின் துவக்க விழாவுக்கு செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்க பல்கலைக் கழகங்களின் ஆய்வுகள் வழி கிட்டுபவை, குடும்பங்களின் மறைப்பணியில் மறைமாவட்டங்களுக்கு பெரிய அளவில் உதவுவதாக இருக்கும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்வின் நிலையற்றத்தன்மைகள் அதிகரித்து, நம்பிக்கைகள் குறைந்து காணப்படும் இன்றையச் சூழலில், வாழ்வு மற்றும் குடும்பக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் இப்புதியத் துறை, திருமணம் புரிதல் மற்றும் குடும்பத்தை உருவாக்குவது குறித்த நல் நோக்கங்களை விதைப்பதில் செயலாற்றவுள்ளது குறித்த தன் மகிழ்ச்சியையும் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
குடும்பம் தொடர்புடைய விவகாரங்களை ஆய்வுச் செய்து உதவும் கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்களிடையே கலந்துரையாடல், கத்தோலிக்க பல்கலைக்கழகங்களுக்கும் கிறிஸ்தவ சமூகங்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பை உருவாக்கல், சமூகத்தில் குடும்பம் மற்றும் வாழ்வு கலாச்சாரத்தை ஊக்குவித்தல், இந்த நடவடிக்கைகளின் பரிந்துரைகைளைக் கைக்கொண்டு குடும்பங்களின் ஆன்மீக, மறைப்பணி, கலாச்சார, சட்ட ரீதியான, பொருளாதார மற்றும் சமூகவியல் துறைகளில் உதவுதல் என இப்புதியத் துறையின் பாணிகளைக் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்