தேடுதல்

திருத்தந்தையுடன் யூத மதகுரு Abraham Skorka திருத்தந்தையுடன் யூத மதகுரு Abraham Skorka  

மத உரையாடல்கள் வளர்ச்சிக்கான கதவைத் திறக்கின்றன : திருத்தந்தை

நம்பிக்கை உள்ளவர்கள் வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளிலும் மனித உரிமைகளுக்காகப் போராட முடியும் என்பதையும், அவர்களுக்குத் துணை நிற்க வேண்டும் என்பதையும் நீங்கள் சரியாகச் சுட்டிக்காட்ட விரும்பினீர்கள் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம்  - வத்திக்கான்

உரையாடல், நீதி மற்றும் அமைதியான சகவாழ்வுக்கான அர்ப்பணிப்பு, எல்லா ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான உறவுகளை, அவர்களின் நம்பிக்கை எதுவாக இருந்தாலும், பெருகிய முறையில் வகைப்படுத்தும் என்று தான் நம்புவதாகக் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஸ்லோவாக்கியாவில் உள்ள டிரனாவா பல்கலைக்கழகம், யூத-கிறிஸ்தவ மற்றும் மதங்களுக்கு இடையேயான உரையாடல் மற்றும் அறிவியல் மற்றும் கல்வித் துறையில் மதசகிப்புத்தன்மையை மேம்படுத்துவதற்கான சிறந்த பங்களிப்பிற்காக யூத மதகுருவான Abraham Skorka அவர்களுக்குக் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்துள்ள வேளை, அவருக்கு வழங்கியுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

நாம் இருவரும் பல ஆண்டுகளாக ஒருவரையொருவர் அறிந்திருக்கிறோம், குறிப்பாக, யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடையே உரையாடலை மேம்படுத்துவதற்கான உங்கள் அர்ப்பணிப்புக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்று அச்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உங்கள் நட்பு மற்றும் ஞானத்தின் கொடையை நானே அனுபவித்திருக்கிறேன், அதற்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறேன் என்றும். ஒருவருக்கொருவர் வளமைப்படுத்திக் கொள்ளும் மத உரையாடல்களில் செலவழித்த தருணங்களையும், மதங்களுக்கு இடையேயான உரையாடலில் நட்பு பற்றிய உங்களிடம் வெளியிடப்பட்ட எண்ணங்களையும் குறிப்பாக இப்போது நான் நினைவுகூர்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

உங்கள் நாற்பத்திரண்டு ஆண்டுகால கற்பித்தல் மற்றும் புலமைத்துவத்தில், நீங்கள் இறையியலின் அறிவியல் அம்சங்களை முழுமையாக மதிக்கும் அதேவேளையில், இரண்டு தலைமுறை யூதக் குருக்களையும், கத்தோலிக்க மற்றும் பெந்தக்கோஸ்து இறையியலாளர்களையும் உங்களின் அர்ப்பணம் நிறைந்த வாழ்வால் கவர்ந்துள்ளீர்கள் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார் திருத்தந்தை.

 2021- ஆம் ஆண்டில் ஸ்லோவாக்கியாவிற்கு நான் மேற்கொண்ட மறக்கமுடியாத எனது பயணத்தை நோக்கி என் எண்ணங்கள் இப்போது செல்கின்றன என்றும், அப்போது கத்தோலிக்கர் பலருடன் பிராட்டிஸ்லாவாவில் உள்ள ரைப்னோ சதுக்கத்தில் யூத சமூகத்துடனான சந்திப்பு சிறப்புமிக்கதாக அமைந்திருந்தது என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய சந்திப்புகள் மதங்களுக்கிடையே பயனுள்ள உறவுகளின் வளர்ச்சிக்கான கதவைத் திறக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 May 2023, 14:39