திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை - சகோதர அன்பின் நாள்

1973 ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பால் மற்றும் முதுபெரும்தந்தை மூன்றாம் ஷெனௌடா ஆகியோருக்கு இடையே நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பின் ஐம்பதாவது ஆண்டு நிறைவை என்னுடன் கொண்டாட உரோம் வருவதற்கான எனது அழைப்பை ஏற்றுக்கொண்டார் முதுபெரும்தந்தை இரண்டாம் தவட்ரோஸ்

மெரினா ராஜ் – வத்திக்கான்

கருமேகம் வானத்தைச் சூழ்ந்திருக்க மழைத்துளிகள் மண்ணை நனைத்திருக்க குடைகளோடும் மழைகாப்பு உடைகளோடும் வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை புனித ஆறாம் பவுல் மற்றும் முதுபெரும்தந்தை மூன்றாம் ஷெனௌடா ஆகியோர் சந்தித்த 50 ஆம் ஆண்டினைக் கொண்டாட உரோமிற்கு வந்திருக்கும் அலெக்சாந்திரியாவின் தேசத்தந்தையும், எகிப்தின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் தலத்திருஅவையின் தலைவருமான முதுபெரும்தந்தை இரண்டாம் தவட்ரோஸ் அவர்களை வாழ்த்தினார். அதன்பின் முதுபெரும்தந்தை  இரண்டாம் தவட்ரோஸ் அவர்கள் தனது கருத்துக்களை அரபு மொழியில் வழங்கினார்.

முதுபெரும்தந்தையுடன் திருத்தந்தை
முதுபெரும்தந்தையுடன் திருத்தந்தை

முதுபெரும்தந்தை இரண்டாம் தவட் ரோஸ் அவர்களின் உரைச்சுருக்கம்

திருத்தந்தையாக மற்றும் உரோம் ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 வது ஆண்டு விழாவில் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் தலத்திருஅவையின் அனைத்து அமைப்புகளின் சார்பாகவும் எனது வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். அனைத்து துறைகளிலும் உலகம் முழுவதற்கும் நீங்கள் செய்த அனைத்தையும் நான் பாராட்டுகிறேன், கிறிஸ்து உங்களை நல்ல ஆரோக்கியத்துடன் வைத்து நீண்ட ஆயுளை ஆசீர்வதிக்க செபிக்கிறேன்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், எனது முதல் உரோம் வருகையின் போது என்னையும் காப்டிக் தலத்திருஅவைப் பிரதிநிதிகளுடன் சேர்ந்து வரவேற்றதில் உங்கள் அன்பையும் பாசத்தையும் நினைவுகூர்கின்றேன். சகோதர அன்பினால் எங்களை நிரப்பி ஒவ்வொரு ஆண்டும் இந்நாள் சகோதர அன்பின் நாளைக் கொண்டாடும் நாளாக மாறிவிட்டது. கடவுளுக்குப் பணியாற்றுவதிலும், மனிதகுலத்திற்கு பணியாற்றுவதிலும், நம்மை ஒன்றிணைக்கும் கிறிஸ்தவ ஆற்றல் மற்றும் அன்பை உள்ளடக்கிய ஒரு நாள் என்றே இதனைக் கருதுகிறேன்.

அன்பான சகோதர சகோதரிகளே,  பேராசை மற்றும் சுயநல உலகின் அலைகளுக்கு எதிராக, கடவுளின் அன்பு, அவருடைய உயர்ந்த பெயர் என்றும் உள்ளது என, உலகம் முழுவதும் அறியும்படி, கிறிஸ்து நம்மிடம் கேட்கும் அன்பின் சவாலை ஏற்றுக்கொண்டு, உண்மையான கிறிஸ்தவர்களாக இருப்போம். இந்த உற்சாகமான வாழ்க்கைப் பயணத்தில் நாம் தனியாக இல்லை, முன்னோக்கிச் செல்லுமாறு கடவுள் நம்மைத் தூண்டுகிறார். அதனால் நாம் விண்ணக எருசலேமின் உயிருள்ள உருவமாக இருப்போம் என்ற கடவுளின் வாக்குறுதிகளின்படி செபங்களுடன் நம்மைத் தாங்கி, வாழ்வின் பாதையில் ஒன்றாக நடப்போம். வேறுபாடுகள் இருந்தபோதிலும், நம்மில் இருக்கும் கிறிஸ்துவின் அன்பால் நாம் ஒன்றுபட்டுள்ளோம்.  நமது முன்னோடிகள், திருத்தூதர்கள் மற்றும் புனிதர்கள் நம்மைச் சூழ்ந்து வழிநடத்துகிறார்கள் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து வாழ்வோம்.

திருத்தூதர்களான, புனித பவுலும் பேதுருவும் நற்செய்தி அறிவித்த இடத்தில் நான் நின்றுகொண்டிருக்கிறேன், இந்த அற்புதமான வளாகத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். “ வெற்றியாளரை என் கடவுளின் கோவிலில் தூணாக வைப்பேன், அவர் மீண்டும் வெளியே வரமாட்டார்" என்பதற்கேற்ப நிற்கும் இவ்வாலயத்தூண்களைக் கண்டு மகிழ்கின்றேன். உலகத்தின் தீமைகளை, அதன் பலவீனங்களை வென்று, நமக்கு இருக்கும் பொறுப்பை ஏற்று, இந்த உலகில் அமைதிக்காக கிறிஸ்துவின் நறுமணத்தைப் போல கூடி வாழ உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

முதுபெரும்தந்தை தவட்ரோஸ் அவர்களின் உரையைத் தொடர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதுபெரும்தந்தை இரண்டாம் தவட்ரோஸ் அவர்களுக்குத் தன் நன்றியினையும் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு தன் வாழ்த்துக்களையும் தெரிவித்து மகிழ்ந்தார். முதுபெரும்தந்தை இரண்டாம் தவட் ரோஸ் அவர்களின் உரை மட்டும் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருத்தந்தை மறைக்கல்விஉரை வழங்கவில்லை.

குழந்தையை முத்தமிட்ட திருத்தந்தை
குழந்தையை முத்தமிட்ட திருத்தந்தை

திருத்தந்தையின் வாழ்த்து   

அன்பான சகோதர சகோதரிகளே: 1973 ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பால் மற்றும் முதுபெரும்தந்தை மூன்றாம் ஷெனௌடா ஆகியோருக்கு இடையே நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பின் ஐம்பதாவது ஆண்டு நிறைவை என்னுடன் கொண்டாட உரோம் வருவதற்கான எனது அழைப்பை  ஏற்றுக்கொண்டார் முதுபெரும்தந்தை இரண்டாம் தவத்ரோஸ் இது உரோம் ஆயருக்கும் காப்டிக் ஆர்த்தடாக்ஸின் முதுபெரும்தந்தைக்கும் இடையிலான சந்திப்பு இந்நாள். இதே நாளில் தான் திருஅவை 1973 ஆம் ஆண்டு மே 10ஆம் நாள் ஒரு பொதுவான அறிக்கையில் கையொப்பமிட்டது. இந்த இருபெரும் ஆண்டு விழாவில் எனது அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கும், ஆர்த்தடாக்ஸ் காப்டிக் தலத்திருஅவை மற்றும் கத்தோலிக்க திருஅவைக்கும் இடையிலான நட்புறவுக்கான உங்கள் அர்ப்பணிப்புக்கும் நன்றி.

இவ்வாறு தன் உரையை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இங்கிலாந்து, பின்லாந்து, இந்தியா, கொரியா, தென்ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, எகிப்து, இந்தோனேஷியா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருந்து வந்திருந்த திருப்பயணிகளை வாழ்த்தினார். அதன் பின் உயிர்த்த இயேசுவின் மகிழ்ச்சி, இறைத்தந்தையின் அன்பு, இரக்கம் கூடியிருந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் அனைவர் மேலும் நிலைத்திருக்க அருள்வேண்டி தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தார்.

மேலும் மே மாதாம் 13 ஆம் நாள் கொண்டாட இருக்கும் புனித பாத்திமா அன்னையின் திருநாளை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லிபிய கடற்கரையில் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களையும் நினைவுகூர்ந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 May 2023, 09:17