அன்னை மரியாவின் பரிசும் பணியும்
மெரினா ராஜ் – வத்திக்கான்
அன்னை மரியா போல பரிசாகவும் பணியாகவும் பெண்கள் தங்கள் வாழ்க்கையைப் பார்க்கவேண்டும் என்றும், அமைதிக்கு அதிகமாக பெண்களின் பாதுகாப்பும் ஆபத்தில் உள்ளது. அரசியல் சர்ச்சைகள் மற்றும் கலாச்சார சித்தாந்தங்களின் பொருளாக அது பயன்படுத்தப்படுகிறது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்
மே 13 சனிக்கிழமை UMOFC என்னும் Mundial ஒருங்கிணைந்த கத்தோலிக்க பெண்கள் அமைப்பின் பொதுப்பேரவையை முன்னிட்டு அதன் உறுப்பினர்கள் ஏறக்குறைய 1500 பேரை வத்திக்கான் புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வரும் வாரம் அசிசியில் நடைபெற இருக்கும் அவ்வமைப்பின் பொதுப்பேரவையை முன்னிட்டு திருத்தந்தையை சந்திக்க வந்திருக்கும் அவர்கள் செபத்துடன் இணைந்து செல்வதன் வழியாக தூயஆவியானவரால் அறிவொளி பெற தங்களை அனுமதிக்கிறார்கள் என்றும் அமைப்பின் நிறுவனர்கள் பின்பற்றிய அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்றி மறைப்பணித் தூண்டுதலைப் புதுப்பிக்க வேண்டும் என்றும், அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நேரம், எதிர்காலம் போன்றவற்றை கண்கள் மற்றும் திறந்த இதயம் கொண்டு பார்க்கவேண்டும் என்றும், உலகில் அநீதி, கைவிடுதல், பாகுபாடு, வறுமை போன்ற பல பெண்களின் புலம்பலைக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக மகளிர் கண்காணிப்பகம், பெண்களின் தேவைகளை அடையாளம் கண்டு, இதயங்களில் நம்பிக்கையையும் அமைதியையும் விதைக்கின்றது என்றும் கூறினார்.
மேலும் பொருளாதார தேவைகள் மற்றும் ஆன்மிகத் தேவைகளைப் போக்க மனிதநேயத்துடன் பிறர் உதவுவதை உறுதிசெய்வதற்கான அறிகுறிகளை உலக மகளிர் கண்காணிப்பகம் வழங்கும் என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்று உலகில் அமைதியைக் கண்டறிவதற்கான அவசரத் தேவை உள்ளது என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக, இதயத்தில் தொடங்கும் அமைதி, வெறுப்பு மற்றும் கொடுஞ்செயல்களால் நோய்வாய்ப்பட்டு பிளவுபட்டுள்ளது என்றும் கூறினார்.
அன்னையின் பரிசு மற்றும் பணி
பெண்களின் திறனுக்கு முக்கியத்துவம் கொடுத்தலை வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாத்திமா அன்னை ஆடு மேய்க்கும் சிறார்களுக்கு அளித்த காட்சி பரிசாகவும் பணியாகவும் நிறைவாக வாழும் ஒரு சிறந்த பெண்ணின் முன்மாதிரியாக மரியாவைக் காட்டுகின்றது என்றும் கூறினார்.
தாய்மையின் பரிசு, சிறாரைப் பாதுகாத்த பணி ஆகியவை வழியாக மென்மை இரக்கம் கொண்டு, மனம், இதயம், கைகள் ஆகிய மூன்று மொழிகளை ஒருங்கிணைத்து, உயிர்களை உருவாக்கவும், அதை எப்போதும் பாதுகாக்கவும் அன்னை மரியா பெண்களுக்கு வலியுறுத்துகின்றார் என்றும் கூறினார்.
எப்பொழுதும் நம்முடன் வரும் ஆன்மாவின் இனிய விருந்தினருடன் இந்த உட்புற ஒற்றுமையை வளர்ப்பதில் தான் சீடத்துவம் மற்றும் பணிக்கான தயார்நிலையின் ரகசியம் உள்ளது என்றும், கடவுள் மீது அன்பு கொண்டு கொடியின் கிளைகளைப் போல அவருடன் ஐக்கியமாக இருக்கவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
அமைதிக்கு அதிகமாக பெண்களின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரசியல் சர்ச்சைகள் மற்றும் கலாச்சார சித்தாந்தங்களின் பொருளாக அது பயன்படுத்தப்படுகிறது என்றும், மனித அடையாளத்தையும் பெண்களின் அடையாளத்தையும் வெளிப்படுத்தும் மானுடவியல் கூறுகளை மீட்டெடுக்க முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
அன்னை மரியா போல தேர்ந்தெடுக்கப்பட்ட உணர்வின் விழிப்புணர்வு, பெண்களாக இருப்பதன் முழுமை, கடவுளின் பணியில் முதன்மையானவர்களாக செயல்பட வேண்டும் என்றும், இயேசுவுடனான இந்த உள்ளார்ந்த ஐக்கியம், திருஅவை, குடும்பம், அமைப்பு ஆகியவற்றுடன் ஒற்றுமையாக இருப்பதில் வெளிப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
முழு திருஅவையின் பணியுடன் இணக்கமாக நுழைவதற்கு, படைப்புகளை பாதுகாப்பது, செபத்தில் நாம் பார்த்ததை செயல்படுத்துவது அவசியம் என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சினோடலிட்டி என்னும் ஒருங்கிணைந்த பயணத்தின் அடிப்படை இதுவே என்றும் கூறினார்.
வேற்றுமைகளை எவ்வாறு ஒருங்கிணைப்பது மற்றும் திருஅவை நல்லிணக்கத்தில் எவ்வாறு செயல்படுவது என்பதை அறிய, திருஅவையின் நன்மைக்கு முதன்மையானவர்களாகவும் இணைப்பொறுப்பாளர்களாகவும் இருக்கவேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்திக்கு ஆதரவான திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளில் உற்சாகத்துடன் முன்னேறிச் செல்லவும், தூயஆவியின் உள்ளார்ந்த குரலைப் பின்பற்றி, அவருடைய உள்ளார்ந்த தொடுதல்களுக்குச் செவிசாய்க்கவும் அவ்வமைப்பினரை வலியுறுத்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்