மனித சகோதரத்துவம் குறித்த கலந்துரையாடலில் திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மனித உடன்பிறந்த உறவு பற்றிய அனைத்துலகக் கலந்துரையாடல் கூட்டம், 'தனியாக அல்ல' (Not alone) என்ற தலைப்பில், புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்திலும், அதேநேரத்தில் உலகெங்கிலுமுள்ள எட்டு சதுக்கங்களிலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முன்னிலையில் ஜூன் 10, சனிக்கிழமையன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 23, இச்செவ்வாயன்று, இத்தகவலை வெளியிட்டுள்ள 'அனைவரும் சகோதரரே' (Fratelli Tutti) என்ற அமைப்பு, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில், நோபல் பரிசு பெற்ற 30 பேரும் உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்களும் திருத்தந்தையுடன் பங்கேற்கவுள்ளனர் என்றும் கூறியுள்ளது.
ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீடத் துறை மற்றும், தகவல் தொடர்பிற்கான திருப்பீடத் துறையுடன் இணைந்து இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தை 'அனைவரும் சகோதரரே' என்ற அமைப்பு நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் அனைத்துலக இளைஞர்கள் குழு ஒன்று கலந்துகொள்ளும் என்றும், நிகழ்ச்சியின் முடிவில், திருஅவையின் உலகளாவிய அரவணைப்பின் கட்டிடக்கலை அடையாளமாகத் திகழும் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கைகளைப் கோர்த்து ஒரு மாபெரும் மனிதச்சங்கிலியை அவ்விளையோர் உருவாக்குவார்கள் என்றும் கூறியுள்ளது.
இக்கலந்துரையாடலில் திருஅவையின் திருநிலைக்குழுவினர், பொதுநிலையினர், குடும்பங்கள் மற்றும் சங்கங்களின் பல பிரதிநிதிகள், சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழ்வோர், ஏழைகள், இல்லமற்றோர், புலம்பெயர்ந்தோர், வன்முறை மற்றும் மனித வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டோர் அனைவரும் கலந்துகொள்வர் என்றும் அறிவித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்