கடவுளின் நெருக்கத்தை உணரவைப்பவர் தூய ஆவியார் : திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
தூய ஆவியானவர் நம்மை அச்சங்களிலிருந்து விடுவித்து புதிய வாழ்வுக்கான கதவுகளைத் திறக்கிறார் என்றும், நாமும் அச்சங்களைத் துறந்து கடவுளின் அன்பின் சுடரைப் புதுப்பிப்போம் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மே 28, ஞாயிறன்று, திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட தூய ஆவியானவர் பெருவிழாவையொட்டி வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு நண்பகல் அல்லேலூயா வாழ்த்தொலியுரை வழங்கியபோது இவ்வாறு அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பாஸ்கா விழாவின் மாலை வேளையில் பெரும் அச்சத்தின் பிடியிலிருந்த தனது சீடர்களுக்கு உயிர்த்த ஆண்டவர் தன்னை வெளிப்படுத்தி அவர்களின் அச்சத்தைப் போக்கினார் என்றும், அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார் எனவும் எடுத்துரைத்ததார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தூய ஆவியாரின் கொடை
தூய ஆவியாரின் வரங்கள் வழியாக சீடர்களை உயிர்த்த ஆண்டவர் அச்சத்தின் பிடியிலிருந்து விடுவிக்க விரும்பினார் என்றும், இதன் காரணமாக, அவர்கள் உலகெங்கும் சென்று நற்செய்தியின் சாட்சிகளாகவும் அறிவிப்பாளர்களாகவும் மாற முடியும் என்று அவர் நம்பினார் என்றும் விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவின் மரணத்தால் பெரிதும் அதிர்ச்சியடைந்த சீடர்கள் அறைக்குள் சென்று கதவுகளை மூடிக்கொண்டார்கள் என்றும், நம்பிக்கை இழந்து காணப்பட்டார்கள் என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடினமான சூழ்நிலை, அல்லது தனிப்பட்ட பிரச்சனை அல்லது நம்மை வேதனைப்படுத்தும் துயரம், அல்லது நாம் சுவாசிக்கும் தீமையின் காரணமாக எத்தனை முறை நம்மை நாமே அடைத்துக் கொள்கிறோம்? என்றும் கேள்வி எழுப்பினார்.
அச்சம்போக்கும் தூய ஆவியார்
நாம் சமாளிக்க முடியாத அளவிற்கு அச்சம் கொண்டிருக்கும்போது, துயரங்களைத் தனியாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும், ஏமாற்றங்களுக்கு ஆளாக நேரிடும் என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்படிப்பட்ட நிலைகளில் நாம் தவறான முடிவுகளை எடுக்க நேரிடுகிறது என்றும், அது நம்மைத் தடுத்து நிறுத்துவதுடன், நாம் வளர்ச்சி காணாமுடியாதபடி நம்மை முடக்குகிறது என்றும் எடுத்துக்காட்டினார்.
இப்படிப்பட்ட அச்சம் நிறைந்த சூழலில் அவ்வச்சத்தைப் போக்கும் விதமாக உயிர்த்த ஆண்டவர் அவர்களுக்குத் தூய ஆவியாரை வழங்குகின்றார் என்றும், அத்தூய ஆவியானவர் அச்சத்தின் சிறைகளிலிருந்து நம்மை மீட்கிறார் என்றும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியைப் பெற்றுக்கொண்ட சீடர்கள் அனைவரும் பாவங்களை மன்னிக்கவும், நற்செய்தியை அறிவிக்கவும் வெளியே சென்றனர் என்றும் கூறினார்.
கடவுளின் நெருக்கத்தை உணரவைக்கும் தூய ஆவியார்
தூய ஆவியானவர் கடவுளின் நெருக்கத்தை உணரவைப்பவர் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவருடைய அன்பு அச்சத்தை விரட்டுகிறது, வாழ்வுக்கான வழியை ஒளிரச் செய்கிறது, ஆறுதல் அளிக்கிறது, துன்பத்தில் நம்மைத் தாங்குகிறது என்றும் விவரித்தார்.
நமக்காகவும், திருஅவைக்காகவும் மற்றும் உலகம் முழுமைக்காகவும் ஒரு புதிய பெந்தெகொஸ்தே நாள் நம்மைத் தாக்கும் அச்சங்களை அகற்றி, கடவுளின் அன்பின் சுடரை நம்மில் உயிர்ப்பிக்கட்டும் என்றும், இதற்காகத் தூய ஆவியாரை அழைத்து மன்றாடுவோம் என்றும் கூறினார்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்