தேடுதல்

திருத்தந்தை புனித ஆறாம் பால் மற்றும் முதுபெரும்தந்தை மூன்றாம் ஷெனௌடா திருத்தந்தை புனித ஆறாம் பால் மற்றும் முதுபெரும்தந்தை மூன்றாம் ஷெனௌடா 

Christological உடன்படிக்கையின் 50ஆவது ஆண்டு புத்தக முன்னுரை

1973 ஆம் ஆண்டு மே 9 முதல் 13 வரை, திருத்தந்தை புனித ஆறாம் பால் மற்றும் முதுபெரும்தந்தை மூன்றாம் ஷெனௌடா ஆகியோருக்கு இடையே நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பின் ஐம்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இப்புத்தகம் வெளியிடப்பட உள்ளது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

திருஅவை முழு ஒற்றுமையை நோக்கித் தொடர்ந்து பயணிக்கும்போது, எப்போதும் முன்னோக்கிப் பார்ப்பது மிகவும் முக்கியம் என்றும், திருத்தூதர் பவுலைப் போலவே, கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன்கொண்டு (பிலி 3:13), முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 10 புதன்கிழமை கிறிஸ்தவ ஒன்றிப்பு மேம்பாட்டுத்துறையால் வெளியிடப்பட உள்ள கத்தோலிக்கத் திருஅவை மற்றும் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் தலத்திருஅவை என்னும் புத்தகத்திற்கு எழுதியுள்ள அணிந்துரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை தவட்ரோஸ் அவர்கள் இணைந்து முன்னுரை எழுதியுள்ள இப்புத்தகமானது இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு கத்தோலிக்க திருஅவைக்கும் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் தலத்திருஅவைக்கும் இடையிலான நல்லுறவுக்கு சாட்சியமளிக்கும் முக்கிய ஆவணங்களை எடுத்துரைக்கின்றது.

புனித ஆறாம் பவுல்
புனித ஆறாம் பவுல்

கிறிஸ்தவ ஒன்றிப்புப் பயணத்தில், சில சமயங்களில் நாம் திரும்பிப் பார்க்க வேண்டியது அவசியம் என்றும், ஊக்கமின்மையால் சோதிக்கப்படும் வேளைகளில், நமக்கு முன் சென்ற முன்னோடிகளின் ஒற்றுமை, ஆற்றல் மற்றும் ஆர்வத்தின் வழியாக நம்பிக்கையை மீண்டும் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நாம் கற்பனை செய்வதை விட அதிகமாக, ஏற்கனவே எடுத்துள்ள முயற்சிகள் மற்றும் பயணித்த தூரத்தை நினைவில் வைத்துக் கொண்டு, கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "அவர்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்" (யோவான் 17:21) என்ற கிறிஸ்துவின் செபத்திற்கு பதிலளிக்கும் விதமாக இந்த நிகழ்வு மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளின் நினைவகம் நமது கிறிஸ்தவ பயணத்தைத் தொடர்ந்து ஊக்குவிக்கட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இச்சந்திப்பானது கிறிஸ்தவ ஒன்றிப்புப் பயணத்திற்கு பலனளித்தது என்றும், கத்தோலிக்க திருஅவை மற்றும் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் திருஅவைக்கும் இடையிலான கூட்டு ஆணையத்தை உருவாக்க வழிவகுத்தது ஒற்றுமைக்கான தேடலை வழிநடத்துவதற்கான கொள்கைகளால் விளக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

1979 இல் கையெழுத்திடப்பட்ட இவ்வாவணமானது, 2003 ஆம் ஆண்டில், இருதிருஅவைக் குடும்பத்திற்கு இடையிலான இறையியல் உரையாடலுக்கு அடித்தளமிட்டது என்றும் முக்கியமான ஆவணங்களைத் தயாரித்த உரையாடல், திருஅவைகளுக்கிடையில் வளர்ந்து வரும் புரிதலுக்கு சாட்சியமளிக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நாம் இன்று காண்பது போல புகழ்பெற்ற நம் முன்னோர்களின் சந்திப்பு பலனைத் தருவதை ஒருபோதும் நிறுத்தாது என்றும், உலகம் நம்பும் வகையில் நம்மை ஒன்றிணைக்கும் சகோதர அன்பும் நட்பும் நம்மில் தொடர்ந்து இதுபோல வளரட்டும் என்றும் நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நூலின் நோக்கம்.

1973 ஆம் ஆண்டு மே 9 முதல் 13 வரை, திருத்தந்தை புனித ஆறாம் பால் மற்றும் முதுபெரும்தந்தை மூன்றாம் ஷெனௌடா ஆகியோருக்கு இடையே நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பின் ஐம்பதாவது ஆண்டு நிறைவையொட்டி, கத்தோலிக்க திருச்சபைக்கும் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்துக்கும் இடையேயான சமீபத்திய நல்லிணக்கத்தின் முக்கிய ஆவணங்களை இந்த உரை முன்வைக்கிறது..

இரண்டாவது வத்திக்கான் சங்கத்தின் போது தொடங்கிய நெருக்கத்தின் பலன், நமது முன்னோர்களின் ஆசீர்வதிக்கப்பட்ட சந்திப்பு, நமது திருஅவைகளுக்கு இடையிலான உறவுகளில் ஒரு மைல்கல் ஆகியவற்றை எடுத்துரைக்கின்றது இப்புத்தகம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 May 2023, 14:03