தேடுதல்

நலவாழ்வு அனைவரின் உரிமை நலவாழ்வு அனைவரின் உரிமை 

சரிநிகர் தன்மையோடு அனைவரும் நலவாழ்வுப் பணிகளைப் பெறவேண்டும்

சரிநிகரற்ற நிலைகளை உருவாக்கும் அமைப்புமுறைகளில் மாற்றங்கள் கொணரப்படவில்லையெனில், ஏழைகளின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடியாது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

வாழ்வைக் காத்தலும் அனைவருக்கும் நலவாழ்வைக் கொண்டுச் செல்லலும் என்ற உலக நலவாழ்வு அமைப்பின் 76 ஆவது கூட்டத்தில் WHO அமைப்பின் அர்ப்பணப் பணிகளை பாராட்டியுள்ளது திருப்பீடம்.

தன் 75வது ஆண்டைச் சிறப்பிக்கும் WHO என்னும் உலக நலவாழ்வு நிறுவனத்தின் 76வது கூட்டத்தில், உலகின் நலவாழ்வுக்காக WHO நிறுவனம் ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டிய திருப்பீடப் பிரதிநிதி, உலகில் சரிநிகர் தன்மையோடு அனைவரும் நலவாழ்வுப் பணிகளைப் பெறவேண்டும் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் போராடிவருவதையும் சுட்டிக்காட்டினார்.

மே மாதம் 21 முதல் 30வரை இடம்பெற்ற இக்கூட்டத்தில் உரையாற்றிய திருப்பீடப் பிரதிநிதி, சரிநிகரற்ற நிலைகளை உருவாக்கும் அமைப்புமுறைகளில் மாற்றங்கள் கொணரப்படவில்லையெனில், ஏழைகளின் பிரச்சனைகளுக்கு ஒரு நாளும் தீர்வுகாணமுடியாது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

மக்கள் அனைவரும் மன நலத்துடனும் உடல் நலத்துடனும் இருக்கவேண்டியது மக்கள் அனைவரின் உள்மன மற்றும் ஒருவர் ஒருவருக்கு இடையேயான அமைதிக்கு இன்றியமையாதது என திருத்தந்தையர்கள் பலவேளைகளில் எடுத்துரைத்துள்ளதையும் சுட்டிக்காட்டிப் பேசிய திருப்பீடப் பிரதிநிதி, மக்களின் அடிப்படைத் தேவையான நலவாழ்வுக்கு இயைந்த திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்த வேண்டிய ஒவ்வோர் அரசின் கடமைகளையும் வலியுறுத்தினார்.

உயிர்களைக் காப்பதும், அனைவருக்கும் நலவாழ்வுத் திட்டங்கள் சென்றடைவதை உறுதிச் செய்வதும் நல்மனதுடைய மக்கள் அனைவரையும் சார்ந்துள்ளது, குறிப்பாக அரசியல் பொறுப்பிலுள்ளோரைச் சார்ந்துள்ளது என்பதை எடுத்துரைத்த திருப்பீடப் பிரதிநிதி, பல்வீனமானவர்களின் உரிமைகளை பாதுகாக்கவேண்டியது அனைவரின் கடமை என்பதையும் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 May 2023, 15:24