காங்கோவில் திருத்தந்தை பிரான்சிஸ் காங்கோவில் திருத்தந்தை பிரான்சிஸ்  

“ஆப்ரிக்காவிலிருந்து கையை எடுங்கள்!” என்ற புதிய நூல்

காங்கோ குடியரசு, மற்றும் தென்சூடான் நாடுகளில் திருத்தந்தை ஆற்றிய உரைகளுடன், அந்நாடுகளில் பாதிக்கப்ப்பட்டுள்ள மக்களின் சாட்சியங்களுடன் புது நூல்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இவ்வாண்டு ஜனவரி 31 முதல் பிப்ரவரி 5ஆம் தேதி வரை காங்கோ குடியரசு மற்றும் தென்சூடானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டபோது ஆற்றிய உரைகள் அடங்கிய தொகுப்பு நூல் வத்திக்கான் அச்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

“ஆப்ரிக்காவிலிருந்து கையை எடுங்கள்!” என்ற தலைப்புடன் திருத்தந்தையின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த நூலுக்கு நைஜீரிய பெண்ணுரிமை எழுத்தாளர் Chimamanda Ngozi Adichie  அவர்கள் முகவுரை எழுதியுள்ளார்.

உள்நாட்டு மோதல்களால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும் காங்கோ குடியரசு, மற்றும் தென்சூடான் நாடுகளில் திருத்தந்தை ஆற்றிய உரைகளுடன், அந்நாடுகளில் பாதிக்கப்ப்பட்டுள்ள மக்களின் சாட்சியங்களும், அவர்களின் வாழ்க்கைச் சம்பவங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

மேற்கத்திய பணக்கார நாடுகளால் ஆப்ரிக்கக் கண்டம் சுரண்டப்படுவது குறித்து, திருத்தந்தை தன் கண்டனங்களை வெளியிட்டுள்ளது குறித்து எடுத்துரைக்கும் இந்த நூல், “ஆப்ரிக்காவிலிருந்து கையை எடுங்கள். ஆப்ரிக்காவை மூச்சுத் திணற வைக்காதீர்கள். இது சுரண்டப்படுவதற்கான சுரங்கமோ, கொள்ளையடிக்கப்படுவதற்கான நிலமோ அல்ல. தன் தலைவிதியை ஆப்ரிக்காவே நிணயித்துக் கொள்ளட்டும்!” என காங்கோ குடியரசில் திருத்தந்தை ஆற்றிய முதல் நாள் உரையும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

இரு நாடுகளிலும் அமைதிக்கு அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரசியல் மற்றும் பொருளாதார காலனி ஆதிக்கங்களால் இந்நாடுகள் அடிமைத்தனத்திற்கு ஈடான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தன் திருத்தூதுப் பயணத்தின்போது அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 May 2023, 12:47