டிஜிட்டல் உலகம் என்ற நெடுஞ்சாலையின் மேடுபள்ளங்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
அனைத்தும் கணனி மயமாக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில் டிஜிட்டல் உலகில் வாழ்ந்து வரும் நாம் அனைவரும் எவ்வாறு அன்புடன் கூடிய அக்கம்பக்கத்தினராக வாழும் கலாச்சாரத்தை ஊக்குவிக்க முடியும் என்பதை விளக்கி ஏடு ஒன்றை வெளியிட்டுள்ளது திருப்பீடச் சமூகத் தொடர்புத் துறை.
‘முழுமையான இருப்பை நோக்கி – சமூகத் தொடர்புச் சாதனங்களில் ஈடுபடுவது குறித்த மேய்ப்புப்பணி சார்ந்த சிந்தனைகள்’ என்ற தலைப்பில் மே 29, திங்களன்று வெளியிடப்பட்ட இந்த ஏடு, சமூகத் தொடர்பில் ஈடுபட்டுள்ள கிறிஸ்தவர்கள், எவ்வாறு நல்ல சமாரியர் உவமையால் தூண்டப்பவர்களாக நமக்கு அடுத்திருப்பவருடன் அன்பின் கலாச்சாரத்தை ஊக்குவிப்பது என்பது குறித்து விவாதிக்கிறது.
மக்கள் பொருட்களைப் பயன்படுத்துபவர்களாக இருக்கும் அதேவேளை, அவர்களே பயன்படுத்தப்படும் பொருட்களாகவும் மாறிவரும் இன்றைய சூழலில், இதற்கு விசுவாசத்தின் அடிப்படையில் பதில் தேட முயல்கின்றது இப்புதிய ஏடு.
மற்றவர்களுக்கு செவிமடுத்தல், ஒருமைப்பாட்டுணர்வு போன்றவைகளின் வழி ஒன்றிப்புணர்வை ஏற்படுத்தி, ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை, சரிநிகர்தன்மை, அனைவரையும் ஏற்றுக்கொள்ளல், கடவுள் வழியில் நடைபோடுதல், சான்று பகர்தல் என்பவைகளின் அடிப்படையில் வாழ்வைக் கட்டியெழுப்ப முடியும் எனவும் எடுத்துரைக்கிறது இவ்வேடு.
டிஜிட்டல் உலகம் என்பது ஒரு நெடுஞ்சாலையாக பல்வேறு வாய்ப்புக்களை வழங்குகின்றபோதிலும், பல மேடுபள்ளங்களும் அதன் வழியில் இருக்கின்றன என்பதும் இந்த ஏட்டில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
டிஜிட்டல் உலகில் நாம் சந்திப்போருடன், வெறும் பார்வையாளராகவா, ஊக்கமும் நட்புணர்வும் உடையவர்களாகவா நாம் செயல்படுகிறோம் என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும் என அழைப்புவிடுக்கும் இவ்வேடு, சமூகத்தொடர்பில் கிறிஸ்தவர்கள் தனித்தன்மையுடன் செயல்படவேண்டியதன் அவசியம், டிஜிட்டல் உலகில் சான்று வாழ்வு, போன்றவை குறித்தும் விவாதிக்கின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்