தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

ஒரு ஆராய்ச்சியாளர் என்பவர் கற்றுக்கொள்ள விரும்ப வேண்டும்

ஒரு பல்கலைக்கழகத்தின் நோக்கம் என்பது சமூக நடனக் கலைஞர்களை உருவாக்குவது போன்றது. காரணம், அதில் பங்குபெறும் அனைவருமே வாய்ப்புப் பெறுகின்றனர், அதில் யாரும் விலக்கப்படுவதில்லை : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஒரு கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் என்பது மறைபரப்புப் பணிகொண்டதாக இருக்க வேண்டும், ஏனெனில் மறைபரப்புப் பணி என்பது முழுத் திருஅவையின் உத்வேகம், இயக்காற்றல், முயற்சி மற்றும் வெகுமதியை உள்ளடக்கியுள்ளது என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் (OCULAC) நடத்தும் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொள்ளும் பங்கேற்பாளர்களுக்கு, மே 4, இவ்வியாழனன்று வழங்கிய உரையில் இவ்வாறு உரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'கத்தோலிக்கராக' இருப்பதென்றால், கிறிஸ்து மற்றும் உலகத்தின் மறையுண்மை, ஆண் மற்றும் பெண்ணின் மறையுண்மை பற்றிய பரந்த பார்வையைக் கொண்டிருப்பதாகும் என்றும், எதார்த்தத்தின் அகல்பரப்புக்காட்சியை (panorama of reality) உணர்ந்துகொள்ள நமக்கு மனங்களும், இதயங்களும், கைகளும் தேவைப்படுகின்றன என்றும் கூறியுள்ளார் திருத்ந்தை.

மேலும் மனிதகுலத்தின் இலக்கணம் மற்றும் சொற்களஞ்சியத்தை நன்கு கற்றுக்கொள்வதன் வழியாக, முன்நிகழ்ந்திராததைக் (unprecedented) கற்பனை செய்ய அனுமதிக்கும் ஆர்வம்கொண்ட சமூகக் கவிஞர்கள், ஆண்கள் மற்றும் பெண்களைப் பயிற்றுவிப்பதே பல்கலைக்கழகத்தின் நோக்கமாக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

ஒரு பல்கலைக்கழகத்தின் நோக்கம் என்பது சமூக நடனக் கலைஞர்களை உருவாக்குவது போன்றது. காரணம், அதில் பங்குபெறும் அனைவரும் வாய்ப்புப் பெறுகின்றனர், மேலும் அதில் யாரும் விலக்கப்படுவதில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நான் கல்வித்துறையில் 'mission' என்ற வார்த்தையை மொழிபெயர்க்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கு, 'ஆராய்ச்சி' என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்துவேன் என்றும் கூறியுள்ளார்.

தேடல் நிறைந்த ஒரு மனிதர் மறைபரப்பு மனமும் இதயமும் கொண்டவர். அம்மறைபரப்புப் பணியாளருக்கு  நற்செய்தியின் மகிழ்ச்சி தெரியும், எனவே, அவர் தனது நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களின் தாயகத்தை விட்டு வெளியேறி, ஆராயப்படாத இடங்களுக்குச் செல்கிறார். அவருக்கு நற்செய்தி தெரியும், ஆனால் அந்த அந்நிய மண்ணில் அது என்ன பலனைத் தரும் என்று அவருக்குத் தெரியாது. ஆகவே, அறிந்ததற்கும் அறியாததற்கும் இடையே இருக்கும் பதற்றம்தான் அவரை முன்னோக்கிச் செலுத்துகிறது மற்றும் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறேன் என்ற அனுமானத்திலிருந்து அவரைப் பாதுகாக்கிறது என்றும் விளக்கியுள்ளார் திருத்தந்தை

மேலும், ஒரு சிறந்த ஆராய்ச்சியாளர் என்பவர், வெளியே சென்று கற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றால், என்ன அற்புதமான அறிவை அவர் பெற்றிருந்தாலும் தனது சொந்த அறிவை சிதைத்துக்கொள்ளக் கூடியவராகவே இருப்பார் என்றும் எச்சரிதுத்துள்ளார் திருத்தந்தை.

ஆகவே, உங்கள் பல்கலைக்கழகங்கள், தனிப்பட்ட கல்வி நிறுவனங்களாகவும், கத்தோலிக்கப்  பல்கலைக்கழகங்களின் வலையமைப்பாகவும், உலகப் புகழ்பெற்ற ஆராய்ச்சி மையங்களாக மாறட்டும். அப்படிப்பட்ட நிலையில்தான் அவைகள் மறைபரப்பும் மனங்களை உருவாக்கக் கூடியவைகளாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 May 2023, 14:48