தேடுதல்

அமைதியின் திருப்பயணியாக, விசுவாசத்தின் மனிதராக திருத்தந்தை

கர்தினால் பீட்டர் எர்தோ : திருத்தந்தை ஹங்கேரி நாட்டிற்கு வந்ததற்கு ஒரே காரணம் அவரின் மேய்ப்புப்பணி அன்பேயாகும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அமைதியின் உண்மை திருப்பயணியாக ஹங்கேரி நாட்டில் திருப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு மக்களுக்கு அளவிடமுடியாத மகிழ்ச்சியையும், அமைதிக்கு உழைப்பதற்கான அழைப்பையும் கொணர்ந்துள்ளார் என தெரிவித்தார் அந்நாட்டு கர்தினால் Péter Erdő.

திருத்தந்தையின் ஹங்கேரி நாட்டிற்கான திருப்பயணம் குறித்து வத்திக்கான் செய்திக்கு பேட்டியளித்த கர்தினால் எர்தோ அவர்கள், ஹங்கேரி மக்கள் மீதான பெரும் அன்புடன் இங்கு வந்த திருத்தந்தை, ஓர் அமைதியின் திருப்பயணியாக, விசுவாசத்தின் மனிதராக வந்து மக்களின் மனதைக் கவர்ந்து சென்றுள்ளார் என்றார்.

கத்தோலிக்க சமூகத்திற்கு மட்டுமல்ல, நாடு முழுமைக்கும் இது ஒரு மகிழ்ச்சியான தருணம் என்பதைக் குறிப்பிட்ட எஸ்டர்கோம்-புதாபெஸ்ட் கர்தினால் எர்தோ அவர்கள், திருத்தந்தை இந்நாட்டிற்கு வந்ததற்கு ஒரே காரணம் அவரின் மேய்ப்புப்பணி அன்பேயாகும் எனவும், இது ஹங்கேரி மக்களுக்கு புது ஊக்கமளிப்பதாக உள்ளது எனவும் எடுத்துரைத்தார்.

கத்தோலிக்கரல்லாதவர்களும், பிற கிறிஸ்தவ சபையினரும், சமுதாயப் பிரதிநிதிகளும் மத நம்பிக்கையற்றவர்களும் திருத்தந்தையின் திருப்பயணத்தின்போது கலந்துகொண்டது மகிழ்ச்சி தரும் ஒரு நிகழ்வாகும் என மேலும் கூறினார் கர்தினால் எர்தோ.

திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்தின்போது, ஆயர்கள் அருள்பணியாளர்கள் திருத்தொண்டர்கள், துறவறத்தார், ஆசிரியர்கள், பொதுநிலையினர், வறியோர், மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற சிறார், உறைவிடமற்றோர், புலம்பெயர்ந்தோர், புலம்பெயர்ந்தோரிடையே பணிபுரிவோர் ஆகியோர் பெரும் ஊக்கத்தைப் பெற்றதை நேரில் காணமுடிந்தது எனவும் எடுத்துரைத்தார் கர்தினால் எர்தோ.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 May 2023, 13:27