தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

பழமையான மற்றும் உன்னதமான தூதரின் செயல்பாடுகள்

தற்போதைய உலக சூழ்நிலையானது, தூதர்களும் அவர்களது உடன்பணியாளர்களும், உரையாடலின் வழக்கறிஞர்களாக, நம்பிக்கையின் வெற்றியாளர்களாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

தூதரின் செயல்பாடு பழமையானது மற்றும் உன்னதமானது என்றும் தூதரின் நேர்மறையான பங்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு வகையான சூழ்நிலைகளிலும் சான்றளிக்கப்படுகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 13, சனிக்கிழமை, வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் திருப்பீடத்திற்கான தூதுவர்களாகப் பணியாற்றுவதற்கான நம்பிக்கைச் சான்றிதழ்களைத் திருத்தந்தையிடம் வழங்க வந்திருந்த அயர்லாந்து, பங்களாதேஷ், சிரியா, காம்பியா மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளின் தூதர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தூதர் பவுல், இயேசு கிறிஸ்துவின் அறிவிப்பாளர்களை விவரிக்க (2 கொரி 5:20). ‘நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார் என்று மேற்கோள்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூதர் என்பவர் ஒரு ஆணாகவோ பெண்ணாகவோ யாராக இருந்தாலும் உரையாடல் செய்பவராக, உறவின் பாலம் கட்டுபவராக, நம்பிக்கையின் உருவமாக இருக்கிறார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

நாம் அனைவரும் மனித குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் மனிதகுலத்தின் இறுதி நன்மையாம் நம்பிக்கை என்னும் பொதுவான நிலை அனைவருக்கும் சாத்தியமாகும் என்றும், அமைதி என்பது ஒரு கனவு அல்ல என்று தான் நம்புவதாகவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தூதர் தனது சொந்த நாட்டிற்கு உண்மையாகத் தொடர்ந்து பணியாற்றும்போது, ​​தேவையற்ற உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளைக் கண்டறிய, வேரூன்றிய நிலைகளை கடக்க முயற்சிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது நிச்சயமாக எளிதான பணி அல்ல என்றும், பகுத்தறிவின் குரல் மற்றும் அமைதிக்கான அழைப்புகள் பணியின் போது பெரும்பாலும் காதுகளில் விழும் என்றும் எடுத்துரைத்தார்.

தற்போதைய உலகச் சூழ்நிலையானது, தூதுவர்களும் அவர்களது உடன்பணியாளர்களும், உரையாடலின் வழக்கறிஞர்களாக, நம்பிக்கையின் வெற்றியாளர்களாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  திருப்பீடம் அதன் சொந்த இயல்பு மற்றும் பணிக்கு இணங்க, ஒவ்வொரு நபரின் மீற முடியாத மாண்பை பாதுகாக்கவும், பொது நன்மையை மேம்படுத்தவும், அனைத்து மக்களிடையே மனித உடன்பிறந்த உறவை வளர்க்கவும் உதவுகின்றது  என்றும் கூறினார்,

திருப்பீடத்தின் இத்தகைய முயற்சிகள், அரசியல், வணிக அல்லது இராணுவ நோக்கங்களில் ஈடுபடாதவை என்றும், நேர்மறை நடுநிலையைப் பயன்படுத்துவதன் வழியாகவே இவை நிறைவேற்றப்படுகின்றன என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நெறிமுறை நடுநிலைமை என்பதற்கு மாறாக, மனிதத் துன்பங்களை எதிர்கொள்வதில், பன்னாட்டுச் சமூகத்தில் நன்கு வரையறுக்கப்பட்ட நிலையை அளித்தல், மோதல்கள் மற்றும் பிற சிக்கல்களைத் தீர்ப்பதில் சிறப்பாகப் பங்களித்தல் போன்றவற்றிற்குத் திருப்பீடப்பணிகள் அனுமதிக்கின்றன என்றும், திருப்பீடச் செயலகம், திருப்பீடம் மற்றும் அலுவலகங்கள் இணைந்து, மனித குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக ஒத்துழைத்து வெளிப்படையான மற்றும் நேர்மையான உரையாடலில் ஈடுபடத் தயாராக உள்ளது என்பதையும் எடுத்துரைத்தார்.

 திருத்தந்தை பிரான்சிஸ்
திருத்தந்தை பிரான்சிஸ்

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் மக்கள்

மோதல்களையும் அமைதியின்மையையும் எதிர்கொள்ளும், சூடான், காங்கோ ஜனநாயகக் குடியரசு, மியான்மார், லெபனான் மற்றும் ஜெருசலேம், கடுமையான சமூக, பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடியை அனுபவித்து வரும் ஹைட்டி, சொல்லொண்ணா துன்பத்தையும் மரணத்தையும் கொண்டு வந்துள்ள உக்ரைனில் நிகழ்ந்துகொண்டிருக்கும் போர், போன்றவற்றையும் நினைவுகூர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வலுக்கட்டாய இடம்பெயர்தல், காலநிலை மாற்றத்தின் விளைவுகள், போன்றவற்றினால் உலகெங்கிலும் உள்ள ஏராளமான மக்கள், தூய்மையானத் தண்ணீர், உணவு, கல்வி வேலை போன்ற அடிப்படை சுகாதார வசதிகள் இன்றி இன்னும் வறுமையில் வாடுகின்றனர் என்றும், இதனால் உலகளாவியப் பொருளாதார அமைப்பில் ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகத்தின் தற்போதைய நிலையைப் பற்றி நாம் ஒருபோதும் திருப்தியடையவோ அல்லது மோசமாகவோ அலட்சியமாகவோ உணரக்கூடாது என்றும், நாம் மேற்கொள்ளும் சாதனைகள் மற்றும் முன்னேற்றங்களிலிருந்து மனித குடும்பம் நம் காலத்தின் சவால்களை வெற்றிகரமாகச் சந்திக்கும் திறன் கொண்டது என்று நம்பிக்கையோடும் உறுதியோடும் நாம் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 May 2023, 13:23