மருத்துவமனையில் குழந்தைக்கு திருமுழுக்கு கொடுத்த திருத்தந்தை
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஜெமெல்லி மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவிலுள்ள குழந்தைகளைச் சந்தித்துப் புதிதாகப் பிறந்த குழந்தை ஒன்றுக்குத் திருமுழுக்கு அருள்சாதனத்தையும், உயிர்ப்பு பெருவிழாவிற்கான பொருள்களையும் கொடுத்து மகிழ்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 31, வெள்ளிக்கிழமை மாலை செபமாலைகள், இனிப்புகள், இயேசுவின் பிறப்பு பற்றிய புத்தகம் ஆகியவற்றை அங்குள்ள குழந்தைகளுக்குக் கொடுத்து மகிழ்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிறந்து சில வாரங்களே ஆன "மிகுவேல் ஏஞ்சல் என்னும் குழந்தைக்குத் திருமுழுக்கு அருளடையாளத்தையும் அளித்து ஆசீர்வதித்தார்.
புற்றுநோயியல் பிரிவில் உள்ள குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோரையும் சந்தித்து ஆறுதலான வார்த்தைகளையும் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மருத்துவமனையில் பணியாற்றும் பணியாளர்களின் தியாகம் பணியார்வம் போன்றவற்றைக் குறித்து அவர்களை வாழ்த்தி, நன்றியினைத் தெரிவித்து, கிறிஸ்துவின் சிலுவைக்கு சாட்சியாக இருங்கள் என்றும் அவர்களைக் கேட்டுக் கொண்டார்.
வண்ணங்கள் பூசப்பட்ட சுவர்கள் மற்றும் பொம்மைகளின் மகிழ்ச்சியால் வரவேற்கும், ஆழமான வலி நிறைந்த புற்றுநோயியல் மற்றும் குழந்தை நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவுக் குழந்தைகளைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செபமாலைகள், உயிர்ப்பை அடையாளப்படுத்தும் முட்டை வடிவ இனிப்புகள், இயேசுவின் பிறப்பு பற்றிய புத்தகம், போன்றவற்றையும் அவர்களுக்கு வழங்கி மகிழ்ந்தார்.
மேலும் ஜெமெல்லி மருத்துவமனையில் உள்ள புற்றுநோயியல் பிரிவில் தனது வருகையைப் பதிவு செய்வதன் அடையாளமாக, ஒரு வெற்றுத் தாளில் சிறு செபத்தையும் கையெழுத்தையும் பதிவிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2021 ஆம் ஆண்டில் ஏற்கனவே இம்மருத்துவமனையில் பெருங்குடல் அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த போதும் இப்பிரிவில் இருந்த குழந்தைகளை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்