திருத்தந்தையின் 41ஆவது ஹங்கேரி திருத்தூதுப்பயணம் - ஒரு முன்தூது
மெரினா ராஜ் – வத்திக்கான்
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற 52 ஆவது அனைத்துலக நற்கருணை மாநாட்டில் பங்கு கொள்வதற்காக ஹங்கேரி நாட்டிற்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்முறை ஏப்ரல் மாதம் தனது 41ஆவது திருத்தூதுப் பயணமாக ஹங்கேரி நாட்டிற்கு செல்ல உள்ளார். திருத்தந்தையின் 41ஆவது திருத்தூதுப் பயணத்தைப் பற்றிய ஒரு முன்தூதை இன்றைய நிகழ்வில் நாம் காணலாம்.
ஏப்ரல் 28 வெள்ளிக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் காலை 8.10 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் 11.40 மணிக்கு உரோம் பியுமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட உள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 1 மணி 50 நிமிட பயணத்திற்குப் பின் புடாபெஸ்ட் விமான நிலையத்தை உள்ளூர் நேரம் காலை 10.00 மணிக்கு, அதாவது இந்திய இலங்கை நேரம் பிற்பகல்1.30 மணிக்கு சென்றடைவார். பிற்பகலில் அரசுத்தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை முன்னாள் கார்மேல் துறவுமட இல்லத்தில் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன்பின் மாலை 5.00 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 8.30 மணிக்கு ஹங்கேரி தலத்திருஅவையின் ஆயர்கள் அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், இருபால் துறவறத்தார், அருள்பணித்துவ மாணவர்கள், மற்றும் மேய்ப்புப் பணியாளர்களை ஹங்கேரியின் இணைப் பேராலயமான புனித ஸ்தேவான் பேராலயத்தில் சந்திக்க இருக்கின்றார். மறுநாள் ஏப்ரல் 29ஆம் தேதி சனிக்கிழமை ஹங்கேரியின் புனித எலிசபெத் ஆலயத்தில், குடிபெயர்ந்தோர் மற்றும் ஏழைகளைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாலையில் அந்நாட்டு இளையோரை ஹங்கேரியின் விளையாட்டு மைதானத்தில் சந்திப்பார். ஏப்ரல் 30 ஞாயிற்றுக்கிழமை காலையில் Kossuth Lajos வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றி, மாலையில் பல்கலைக்கழக மற்றும் கலாச்சார உலகினரை புடாபெஸ்டில் உள்ள Péter Pázmány என்னும் கணனி மற்றும் உயிரிஅறிவியல் கத்தோலிக்கப் பல்கலைக் கழகத்தில் சந்தித்து உரையாற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ். மூன்று நாள்கள் கொண்ட இத்திருத்தூதூப் பயணத்தில் திருத்தந்தை 5 உரைகளையும் ஒரு திருப்பலி மறையுரையையும் ஆற்ற உள்ளார்.
மலை நகரங்களைக் கொண்ட ஹங்கேரி
புடாபெஸ்ட் 17,74,000 மக்கள் தொகையைக் கொண்ட ஹங்கேரியின் மிகப்பெரிய நகரமாகும். நாட்டின் மத்திய-வடக்கு பகுதியில், தலைநகரை இரண்டாகப் பிரிக்கும் டானூப் ஆறு அமைந்துள்ளது. 1873 ஆம் ஆண்டில் மேற்கில் புடா, ஒபுடா மற்றும் கிழக்குக் கரையின் சமவெளியில் உள்ள பெஸ்ட் ஆகிய மலை நகரங்கள் ஒன்றிணைந்து நவீன நகரத்தின் எல்லைகளாக உள்ளன. அரசு அலுவலகக் கட்டிடங்களைக் கொண்ட புடாபெஸ்ட் எப்போதும் ஒரு முக்கிய ஐரோப்பிய நகரமாகவும், அரசியல், கலாச்சார மற்றும் தொழில்துறை மையமாகவும், போக்குவரத்து மையமாகவும், பிரபல சுற்றுலாத் தலமாகவும் திகழ்கின்றது. டானூப் நதியில் உள்ள செல்டிக் குடியேற்றத்தில் இருந்து இந்நகரம் பிறந்தது என்றும், அதன் வளர்ச்சி கி.பி 2 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே உள்ளது என்றும் வரலாறு கூறுகின்றது. ரோமானியப் பேரரசின் கீழ் பன்னோனியா மாகாணத்தின் முக்கிய நகரமாகவும் மாறியது. வடக்கே சுலோவாக்கியா, கிழக்கே உக்ரைன், ருமேனியா, தெற்கே செர்பியா, குரோவேசியா, தென்மேற்கே சுலோவேனியா, மேற்கே ஆஸ்திரியா ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்டு திகழ்கின்றது ஹங்கேரி நாடு. இதன் தலை நகரம் புடாபெஸ்ட் ஆகும். கெல்ட்டியர், உரோமையர்கள், குன்கள், சிலாவியர்கள், கெப்பிதுகள், ஆகியோரின் வாழ்விடங்களாக பல நூற்றாண்டுகளாக இருந்த இப்பகுதிகள், 9ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஹங்கேரி நாடாக, ஹங்கேரிய இளவரசர் ஆர்ப்பாதுவினால் உருவாக்கப்பட்டது. ஆர்ப்பாதுவின் கொள்ளுப்பேரன் முதலாம் ஸ்தேவான், 1000மாம் ஆண்டில் ஹங்கேரியை கிறித்தவ நாடாக மாற்றி அதன் அரசரானார். 9 ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஹங்கேரியின் முதல் கிறிஸ்தவ அரசராக முதலாம் ஸ்தேவான் (1000-1038) முடிசூட்டப்பட்டு, ஆர்ப்பாதுவா வம்சம் ஹங்கேரி அரசை நிறுவியது. 1241ஆம் ஆண்டில், புடா, பெஸ்ட் ஆகியவவைகளின் குடியிருப்புகள் மங்கோலிய படையெடுப்பால் அழிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, மன்னர் நான்காம் பெலா இரு நகரங்களையும் பலப்படுத்தி, புடாவில் தனது கோட்டையைக் கட்டினார். 1361 ஆம் ஆண்டில், மத்தியாஸ் கோர்வினஸ் (1458-1490) ஆட்சியின் கீழ், புடா ஹங்கேரியின் தலைநகராகவும், முக்கியமான கலாச்சார மற்றும் கல்வி மையமாகவும் ஆனது. 1526 ஆம் ஆண்டில் இருந்து பெஸ்டும், 1541 ஆம் ஆண்டில் இருந்து புடாவும் 1686 ஆம் ஆண்டு வரை ஓட்டோமான்களின் அதிகாரத்திற்கு கீழ் கட்டுப்பட்டிருந்தன. அதன்பின் அதே ஆண்டு புடா மற்றும் பெஸ்ட் ஆஸ்திரியர்களால் மீண்டும் கைப்பற்றப்பட்டன.
ஆஸ்திரியாவுடன் ஹங்கேரி 1867ஆம் ஆண்டில் இணைக்கப்பட்டது. நகரின் புதிய நிர்வாக மையம் பெஸ்ட் மாவட்டத்தின் கிழக்குக் கரையில் உருவானது. ஹப்ஸ்பர்க்ஸின் கீழ் செழித்து வளர்ந்த நகரத்தில் பல ஆலயங்கள் மற்றும் பொது கட்டிடங்கள் கட்டப்பட்டன. 1784 ஆம் ஆண்டில், இரண்டாம் ஜோசப் அங்கு ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவினார். 1849 ஆம் ஆண்டில், டான்யூப் மீது முதல் நிரந்தர பாலம் திறக்கப்பட்டது. புகழ்பெற்ற இவ்விணைப்புப் பாலம், கம்பீரமான கல் சிங்க தூண்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 1873 ஆம் ஆண்டில், Óbuda, Buda மற்றும் Pest ஆகியவற்றின் உறுதியான இணைப்புக்குப் பின் புடாபெஸ்ட், வியன்னாவிற்குப் பிறகு, ஆஸ்ட்ரோ-ஹங்கேரிய பேரரசின் மிக முக்கியமான நகரமாக விளங்குகின்றது. முதல் உலகப் போரின் முடிவில், செயிண்ட்-ஜெர்மைன்-என்-லே உடன்படிக்கையுடன், ஆஸ்திரியா ஹங்கேரியின் சுதந்திரத்தை அங்கீகரித்தது, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஹங்கேரியின் தலைநகராக மாறிய புடாபெஸ்ட் சோவியத் யூனியனின் மாநிலமாகவும் திகழ்ந்தது. 1956 ஆம் ஆண்டில் சோவியத் ஆட்சிக்கு எதிராக எழுந்த இந்நகரம், புரட்சிகர இயக்கமான செம்படையின் வன்முறையினால் ஒடுக்கப்பட்டது. 1947ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை நாற்பதாண்டு-கால கம்யூனிச ஆட்சி நிலவியது.1989ல் ஆஸ்திரியாவுடன் உள்ள எல்லைப் பகுதியை அது திறந்துவிட்டதை அடுத்து அங்கு கம்யூனிசம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. 1989ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதியன்று ஹங்கேரி, மக்களாட்சி நாடாளுமன்றக் குடியரசாக அறிவிக்கப்பட்டது. ஹங்கேரி அதன் பெயரை ஹங்கேரியர்களிடமிருந்து பெற்றது.
புடாபெஸ்ட் மறைமாவட்டம்
1993ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் நாள் மறைமாவட்டமாக உருவாகிய எஸ்டெர்கோம் புடாபெஸ்ட் 1543 கிமீ பரப்பளவு கொண்டது. 20,38,900 மக்கள் தொகையைக் கொண்ட இம்மறைமாவட்டத்தில் 12,24,630 கத்தோலிக்கர்களாவர். 160 பங்குத்தளம், 25 ஆலயங்கள், 233 மறைமாவட்ட அருள்பணியாளர்கள், 127 வேறு மறைமாவட்ட அருள்பணியாளார்கள், 39 நிரந்தர திருத்தொண்டர்கள், 50 இறையியல் மற்றும் மெய்யியல் அருள்பணித்துவ மாணவர்கள், 179 ஆண் துறவறத்தார், 267 பெண் துறவறத்தார், 77 கல்வியியல் நிறுவனங்கள், 31 பிறரன்பு நிறுவனங்கள் உள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் திருமுழுக்குப் பெற்றவர்களின் எண்ணிக்கை 4380 ஆகும்.
வளமையான ஹங்கேரி
மத்திய-கிழக்கு ஐரோப்பாவின் மையத்தில் முழுவதும் நிலப்பகுதியால் சூழப்பட்ட நாடு ஹங்கேரியாகும். இது வடக்கே ஸ்லோவாக்கியா, மேற்கில் ஆஸ்திரியா மற்றும் ஸ்லோவேனியா, தென்மேற்கில் குரோஷியா, தெற்கில் செர்பியா, கிழக்கில் ருமேனியா மற்றும் வடகிழக்கில் உக்ரைனை எல்லைகளாகக் கொண்டது. ஏறக்குறைய தட்டையான நிலப்பரப்புக்களைக் கொண்ட ஹங்கேரி, மாத்ரா மலைத்தொடரில் உள்ள 1,014 மீ உயரமுடைய கெக்ஸ் மலையைக் கொண்டது. டானூப் மற்றும் அதன் துணை நதி திஸ்ஸா என்னும் இரண்டு முக்கிய ஆறுகளையும் மத்திய ஐரோப்பாவின் மிகப்பெரிய பாலாட்டன் (594 சதுர கிமீ) ஏரியையும் தன்னகத்தேக் கொண்டது. ஹங்கேரியின் இன் பரப்பளவு, 93,032 சதுர கிமீ ஆகும். 97,31,000 மக்கள் தொகையைக் கொண்ட நாடான ஹங்கேரியில் மக்கள் பேசும் மொழி ஹங்கேரியன் மொழியாகும். இந்நாட்டின் முக்கிய இனக்குழுக்களாக மாகியர்கள் (86%), ரோமாக்கள் (3%), ஜெர்மானியர்கள் (2%) ஆகியோர் உள்ளனர். 61 விழுக்காடு கத்தோலிக்கர்களும், 15 விழுக்காடு பிறகிறிஸ்தவ சபைகளும், எந்த மதத்தையும் சாராதவர்கள் 18 விழுக்காடும் காணப்படுகின்றனர்.
பதினோராம் நூற்றாண்டில் தோற்றம்
ஹங்கேரியில் உள்ள ஆலயத்தின் வரலாறு மாகியர் மாநிலத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. ஹங்கேரியில் கிறிஸ்தவம் உருவானதற்குக் காரணமாக இருந்தவர் மன்னர் புனித முதலாம் ஸ்தேவான். (c.a. 969 -1038), ஆர்பாடியின் மாகியார் வம்சத்தைச் சேர்ந்தவரும், ஹங்கேரி நாட்டின் நற்செய்தி பணியாளரும் ஹங்கேரிய அரசை நிறுவியவரும் இவரே. 1000 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி "அப்போஸ்தலிக்க மன்னராக“ முடிசூட்டப்பட்டு பொறுப்பேற்ற அவர், தனது மக்களின் அரசியல் வாழ்க்கையை மட்டுமல்லாது, 39 மாவட்டங்களையும் ஒரே அரசின் கீழ் ஒன்றிணைத்தார். மத ரீதியாகவும், ஒரு திடமான கிறிஸ்தவ அடித்தளத்தை அமைத்து தேசிய கலாச்சாரத்தையும் பாதுகாத்தவர் அவர். அவரது ஆட்சியின் கீழ், பன்னோன்ஹால்மாவின் புகழ்பெற்ற புனித மார்த்தீன் பெனடிக் சபை துறவு இல்லம், ஹங்கேரியின் முதுபெரும் தந்தை இல்லமான ஸ்ட்ரிகோனியோ (எஸ்டெர்கோம்) உட்பட பத்து மறைமாவட்டங்களை உருவாக்கினார். 1083 ஆம் ஆண்டில் புனிதர் பட்டம் பெற்ற முதலாம் ஸ்டீபன் மரணத்திற்குப் பிறகு, நாடு பேரரசுக்கும் திருத்தந்தைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. திருத்தந்தையின் அதிகாரத்தின் கீழ் இருப்பதையே மக்கள் விரும்பினர். அதன்பின், 14 ஆம் நூற்றாண்டில், லூயிஸ் தி கிரேட் ஆட்சியின் கீழ், அரசும் திருஅவையும் ஒருங்கிணைக்கப்பட்டு நாகிவாரட், நித்ரா (இன்றைய ஸ்லோவாக்கியாவில்), சனாட் மற்றும் நாகிசெபென் என்னும் பிற புதிய மறைமாவட்டங்கள் சேர்க்கப்பட்டன.
ஹங்கேரி திருத்தூதுப் பயணத்தின் சின்னம்
சங்கிலி பாலம் அல்லது இணைப்புப்பாலம் என்று அழைக்கப்படும் ஹங்கேரியின் டானூப்பைக் கடக்கும் பழமையான புடாபெஸ்ட் இணைப்புப் பாலமானது மிக முக்கியமாக திருத்தூதுப் பயணச் சின்னத்தில் இடம்பெற்றுள்ளது. மனிதர்களுக்கு இடையே உறவின் பாலம் கட்டப்படுவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் திருத்தந்தையின் கருத்துக்களை வலியுறுத்தும் விதமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
வத்திக்கான் திருப்பீடத்தை அடையாளப்படுத்தும் வகையில் வெள்ளை மஞ்சள் நிறங்களும் ஹங்கேரியின் தேசிய நிறங்களான சிவப்பு வெள்ளை மற்றும் பச்சை நிறங்களும் பாலத்தில் இரு தூண்களில் சந்திப்பது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளன. மொத்த சின்னமும் ஒரு வட்டவடிவத்தால் பிரிக்கப்பட்டிருப்பது நற்கருணையையும் கிறிஸ்துவால் மீட்கப்பட்ட உலகையும் அடையாளப்படுத்துகின்றது. வட்டத்தின் இடது பக்கத்தில், புடாபெஸ்டில் 2021 செப்டம்பர் 12 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிய, சிலுவை கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையே ஒரு பாலமாக மாறும் என்ற உரையை நினைவு கூர்கின்றது. வட்டத்தின் வலது பக்கத்தில் கிறிஸ்து நமது எதிர்காலம் என்றும், ஹங்கேரியில் திருத்தந்தை பிரான்சிஸ் 28-30 ஏப்ரல் 2023 என்றும் எழுதப்பட்டுள்ளது.
ஏப்ரல் 28 வெள்ளிக்கிழமை முதல் 30 ஞாயிற்றுக்கிழமை வரை மேற்கொள்ள இருக்கும் இத்திருத்தூதுப் பயணத்திற்கு கிறிஸ்து நமது எதிர்காலம் என்ற தலைப்புடன் கூடிய வடிவம் சின்னமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 1991 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்கள் இருமுறை ஹங்கேரி நாட்டிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அவரைத் தொடர்ந்து ஹங்கேரி நாட்டிற்குச் செல்லும் இரண்டாம் திருத்தந்தையாக திருத்தந்தை பிரான்சிஸ் திகழ்கின்றார்.
ஹங்கேரி நாட்டிற்கு திருத்தந்தை மேற்கொள்ள இருக்கும் இந்த 41ஆவது திருத்தூதுப் பயணத்தில் தந்தை அவர்களின் உடல் உள்ள நலனுக்காகவும் திருத்தூதுப் பயணம் நல்ல முறையில் வெற்றி பெறவும் தொடர்ந்து செபிப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்