Bosnia மற்றும் Herzegovina தலைவரைச் சந்தித்த திருத்தந்தை
மெரினா ராஜ் – வத்திக்கான்
போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவின் அமைச்சரவை தலைவர் Borjana Krišto, அவர்களை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் சூழல் பற்றி உரையாடினார்.
ஏப்ரல் 3, திங்கள் கிழமை, திருப்பீடத்தில் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவின் அமைச்சர்கள் குழுவின் தலைவரான போர்ஜானா கிரிஸ்டோவை சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐரோப்பிய ஒன்றிய விரிவாக்கம் உட்பட பல தலைப்புகளில் அவருடன் கலந்துரையாடினார்.
போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவின் சிறந்த நிர்வாகத்திறன் கொண்டவரான போர்ஜானா கிரிஸ்டோ தனது நாட்டின் அமைச்சர்கள் குழுவின் தலைவராகவும், முன்னாள் அரசுத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
திருத்தந்தையுடனான தனிப்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, கிரிஸ்டோ, திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்களையும், திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்து மகிழ்ந்தார்.
திருப்பீடச் செயலகத்தில் நடந்த சுமுகமான கலந்துரையாடலின் போது, நாடுகளுக்கிடையேயான நல்லுறவு, சமூகத்திற்கு உள்ளூர் தலத்திருஅவையின் பங்களிப்பு, கத்தோலிக்கச் சமூகத்தின் நிலைமை, திருஅவை - மாநில உறவுகள், அனைத்து குடிமக்களின் சட்ட மற்றும் சமூக சமத்துவம், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவின் பொது நலனுக்காக அரசியல் வாழ்க்கையில் உள்ளடங்கிய உரையாடலின் முக்கியத்துவம், உறுதியான முயற்சிகள், நாட்டின் நிலைமை ஆகியவைக் குறித்த கருத்துக்களில் கவனம் செலுத்தப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தை விரிவுபடுத்துவது தொடர்பான விவாதங்கள் மற்றும், கடந்த டிசம்பர் 2022 இல் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவுக்கு ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் நாடு என்ற தகுதியை வழங்கியது பற்றியும் பேசப்பட்டன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்