பெண்களே உயிர்த்த இயேசுவின் முதல் சாட்சிகள் : திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உயிர்த்த இயேசுவின் பிரசன்னம் நம்மை நாமே மறைத்துக்கொள்ளாது, மற்றவர்களுடன் சந்திப்பதை நோக்கியும், அவர்களுடன் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்ற முடிவை நோக்கியும் நம்மை உந்தித் தள்ளுகிறது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 13, இவ்வியாழனன்று, இத்தாலியிலுள்ள பெண் துறவற சபைகளின் தலைமை அன்னையர்களை அவர்களது 70-வது பொது அமர்வை முன்னிட்டுத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மூன்று தலைப்புகளின் கீழ் தனது சிந்தனைகளை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
உயிர்த்த ஆண்டவரின் முதல் சாட்சிகள் பெண்களே!
பெண்கள்தாம் உயிர்த்த ஆண்டவரின் முதல் சாட்சிகள் என்றும், துணிவு கொண்ட அந்தப் பெண்கள் உயிர்த்தெழுந்தவரின் வல்லமையாலும் அருள் ஒளியாலும் வியப்படைந்து நெகிழ்ந்து அவரைத் தேடிப் புறப்பட்டனர் என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் இதயங்களில் இறைவன் உயிருடன் இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை அவர்கள் முழுமையாக அறிந்திருந்தனர் என்றும் விளக்கினார்.
தோற்றுவாய்க்குச் (source) திரும்பிச் சென்று, நற்செய்தியின் உண்மையான புத்துணர்ச்சி, புதிய பாதைகள், ஆக்கப்பூர்வமான வழிமுறைகள், பிற வெளிப்பாடுகள், அதிக சொற்பொழிவுமிக்க அடையாளங்கள், இன்றைய உலகத்திற்குப் புதுப்பிக்கப்பட்ட அர்த்தமுள்ள வார்த்தைகள் ஆகியவற்றை மீட்டெடுக்கும் துணிவு நமக்கு இருந்தால் நாமும் இவ்வுலகில் துணிவுடன் ஆண்டவரின் நற்செய்திக்குச் சான்றுபகர முடியும் என்பதை அவர்களின் அணுகுமுறை நமக்கு நினைவூட்டுகிறது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
ஒன்றிணைந்து பயணிப்போம்
உயிர்த்த இயேசுவின் பிரசன்னம் நம்மை நாமே மறைத்துக்கொள்ளாது, மற்றவர்களுடன் சந்திப்பதை நோக்கியும், அவர்களுடன் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்ற முடிவை நோக்கியும் நம்மை உந்தித் தள்ளுகிறது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்தப் பெண்கள் இயேசுவுடனான சந்திப்பின் மகிழ்ச்சியை தங்களுக்குள் வைத்துக் கொள்ளவோ, தனியாகப் பயணம் செய்யவோ விரும்பவில்லை, மாறாக, அவர்கள் மற்றவர்களுடன் இணைந்து பயணிக்கும் பாதையைத் தேர்வு செய்தனர் என்று உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாமும் தூய ஆவியாரால் தூண்டப்பட்டு உண்மையின் பாதையில் ஒன்றிணைந்து பயணிக்கக் கற்றுக்கொள்வோம் என்றும் அறிவுறுத்தினார்.
இந்த வழியில், மற்ற திருச்சபைகளுடன் இணைந்து இறையாட்சியைக் கட்டி எழுப்பும் மக்களாக நாம் தொடர்ந்து பயணிப்போம் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதலில் அருள்பணியாளர்களின் குரல்களுக்கு இணைந்து செவிமடுக்கவும், சந்திப்புகளை ஏற்படுத்தவும், உரையாடல்களை நிகழ்த்தவும், ஒன்றாகத் திட்டமிட்டு செயல்படவும், இணைந்து இறையாட்சியைக் கட்டி எழுப்புவும் நமது ஒருங்கிணைந்த பயணித்தைத் தொடர்வோம் என்றும் கூறினார்.
நம்பிக்கையை விதைப்போம்
உயிர்த்த இயேசுவுடனான நமது சந்திப்பு நம் இதயங்களை நம்பிக்கையால் நிரப்புகிறது என்றும், நம்பிக்கையை உருவாக்குபவர்களாக நம்மை மாற்றுகிறது என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சவால்களைச் சந்திக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என்றும், இறைவன் உண்மையுள்ளவராக இருப்பதால், அவரால் அழைப்புப் பெற்ற நாமும் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்