தேடுதல்

சிறைக்கைதியின் பாதத்தை முத்தமிடும் திருத்தந்தை (கோப்புப்படம் 2013) சிறைக்கைதியின் பாதத்தை முத்தமிடும் திருத்தந்தை (கோப்புப்படம் 2013) 

புனித வியாழன்று இளையோர் சிறையில் திருத்தந்தையின் திருப்பலி

இயேசு தம் சீடர்களின் காலடிகளைக் கழுவிய நிகழ்ச்சியின் நினைவாகக் கொண்டாடப்படும் பாதம் கழுவும் சடங்கு, இயேசுவைப் பின்பற்றும் சீடர்கள் ஒவ்வொருவரும் பணிசெய்யும் மனநிலை கொண்டிருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 6 புனித வியாழனன்று, உரோமையில் உள்ள CASAL DEL MARMO என்னும் இளையோர் சிறையில் திருப்பலி நிறைவேற்ற உள்ளதாக அறிவித்துள்ளார் திருப்பீடத்தின் தகவல் தொடர்புத்துறையின் இயக்குனர் மத்தேயு புரூனி.

ஏப்ரல் 6, புனித வியாழனன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் திருமுழுக்கு, நோயில்பூசுதல், குருத்துவம் போன்ற அருளடையாளங்களுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் அர்ச்சிப்பு திருப்பலி, மாலையில் இளையோர் சிறையில் திருப்பலி ஆகியவற்றை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றுவார் என்றும் அறிவித்தார் மத்தேயோ புரூனி.

2013 ஆம் ஆண்டு, மார்ச் 13ஆம் நாள் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதே ஆண்டு மார்ச் 25 வியாழக்கிழமை மாலைத் திருப்பலியை உரோம் நகரில் உள்ள CASAL DEL MARMO என்னும் சிறைச்சாலையில் சிறப்பித்த நிலையில் இவ்வாண்டும் அச்சிறையில் திருப்பலி நிறைவேற்ற உள்ளார்.

திருப்பலியில் பங்கேற்றவர்கள் (2013)
திருப்பலியில் பங்கேற்றவர்கள் (2013)

பழங்குடியினத்தைச் சார்ந்தவர்களும் வட ஆப்ரிக்க பகுதிகளைச் சார்ந்தவர்களுமான 46 இளையோர் தாங்கள் செய்த குற்றங்களுக்காக சிறையில் உள்ள நிலையில் அக்கைதிகளில் 12 பேரின் காலடிகளைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கழுவி முத்தமிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயேசு தம் திருத்தூதர்களின் பாதங்களைக் கழுவியது, திருநற்கருணையை ஏற்படுத்தியது, அன்புக்கட்டளை அளித்தது ஆகியவற்றை நினைவுபடுத்தும் புனித வியாழன் திருப்பலியைத் தான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆண்டில் இவ்விளையோர் சிறையில் திருத்தந்தை சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உரோமை உள்ளூர் நேரம் மாலை 4 மணிக்கு, அதாவது, இந்திய இலங்கை நேரம், இரவு 07.30 மணிக்குச் சிறப்பிக்கப்படும் இத்திருப்பலியில், வெளிநபர்கள் யாரும் பங்கேற்க முடியாது எனவும், தனிப்பட்ட திருப்பலியாக இது இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இயேசு தம் சீடர்களின் காலடிகளைக் கழுவிய நிகழ்ச்சியின் நினைவாகக் கொண்டாடப்படும் பாதம் கழுவும் சடங்கு, இயேசுவைப் பின்பற்றும் சீடர்கள் ஒவ்வொருவரும் பணிசெய்யும் மனநிலை கொண்டிருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 April 2023, 13:17