ஒன்றிணைந்து பணியாற்றும் போது நாம் இயேசுவின் கரங்களாகின்றோம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
இயேசுவோடு இணைந்திருக்கும் போது நாம் பல நற்காரியங்களைச் செய்ய முடியும் என்றும், ஒன்றாக இணைந்து செயல்படும்போது நாம் அனைவரும் இயேசுவின் கரங்களாகின்றோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 15 சனிக்கிழமை ஸ்பெயின் Toledo உயர் மறைமாவாட்டத்தில் உள்ள ("Madre de la Esperanza de Talavera de la Reina) மாற்றுத்திறனாளிகளுக்குப் பணிபுரியும் அறக்கட்டளையின் 50ஆவது ஆண்டு நிறைவையொட்டி அதன் நிறுவனர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிறரன்புப் பணிகள் வழியாக இயேசுவை சந்தித்து அச்சந்திப்பின் மகிழ்வைப் பிறருக்கு எடுத்துரைக்க நாம் வெளியே செல்லும் போது நமது கால்கள், குரல், இதயம் ஆகிய அனைத்தும் இயேசுவினுடைய கால்களாக குரலாக இதயமாக மாறுகின்றன என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பணியைச் செய்ய வாய்ப்பளித்த அப்பணியாளர்களின் பெற்றோர், உடன்பிறந்தோர், ஆசிரியர், அருள்பணியாளர், என அனைவருக்கும் தன் நன்றியினையும் தெரிவித்தார்.
அறக்கட்டளையில் உள்ளவர்களால் செய்யப்பட்ட வண்ணமிகு சிலுவை கைவேலைப்பாடைக் குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வண்ணமயமான எம்பிராய்டரி சிலுவை உயிர்த்தெழுதலுக்கான கனவினைக் காண உங்கள் ஒவ்வொருவரையும் அழைக்கின்றது என்றும் கூறினார்.
விண்ணகத்திற்குச் செல்லும் வழியைக் காட்டவும், அதன் கதவுகளை நமக்குத் திறக்கவும் இயேசு இவ்வுலகிற்கு வந்தார் என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுதந்திர மனதுடன் நன்மை செய்தல், இலக்கை நோக்கி ஒன்றாக நடத்தல், இப்பணிக்கு மிகவும் முக்கியம் என்றும், முயற்சி மற்றும் பொறுமை கொண்டு செய்யப்பட்ட இச்சிலுவை, வண்ணமும் நம்பிக்கையும் நிறைந்த ஒரு அழகிய கலைப் படைப்பில் விளைந்து, நம் இதயங்களில் பலத்தைத் தந்து முன்னேற ஊக்குவிக்கின்றது என்றும் குறிப்பிட்டார்.
ஒற்றுமையுடன் பணியாற்றுவது மற்றும் மகிழ்ச்சியுடன் நன்றி செலுத்துவது அடுத்த 50 ஆண்டுகளுக்கு இவ்வறக்கட்டளையின் தீர்மானமாக இருக்கட்டும் என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த பெரிய பணிக்காகவே இயேசு நம் ஒவ்வொருவரையும் தேர்ந்தெடுத்துள்ளார் என்றும் கூறினார்.
"Madre de la Esperanza de Talavera de la Reina அறக்கட்டளை என்பது, 1973 ஆம் ஆண்டு முதல், மாற்றுத்திறனாளிகளுடைய வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும், அவர்களது குடும்பத்தாருடன் இணைந்து செல்வதற்காக, ஸ்பெயின் Toledo உயர் மறைமாவட்டத்தால் உருவாக்கப்பட்டதாகும்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், கத்தோலிக்கக் கண்ணோட்டத்தில், சமூகத்தின் குடிமக்களாக, உறுப்பினர்களாக மாற்றுத்திறனாளிகளை மாற்றவும், தொழில் வல்லுநர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்கேற்புடன் அறக்கட்டளை செயல்படுத்தப்பட்டு வருகின்றது.1973 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டோலிடோவின் கர்தினால் பேராயர் மார்செலோ கோன்சாலஸ் மார்ட்டின், ஆன்மிகப் பயிற்சி இல்லத்தை சிறப்புக் கல்விக்கான மறைமாவட்ட மையமாக "Madre de la Esperanza" ஆக மாற்றுவதற்கு அங்கீகாரம் அளித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்