உலகளாவிய மனிதர் அருளாளர் ALFREDO CREMONESI
மெரினா ராஜ் – வத்திக்கான்
பணிவு, மகிழ்ச்சி, ஆச்சரியம் ஆகிய மூன்றும் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் மறைப்பணியாளார்களின் அழகிய பண்புகளாகத் திகழ்கின்றன என்றும், மக்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமைக்கானப் புதிய வழிகளைத் திறக்க அருளாளர் ALFREDO CREMONESI போல வாழ முயற்சிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 15 சனிக்கிழமை வத்திக்கானின் புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் இத்தாலியின் Crema மறைமாவட்டத்தைச் சார்ந்த திருப்பயணிகள் ஏறக்குறைய 2200 பேரை சந்தித்த போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடவுளுக்கு முன்பாக நாம் அனைவரும் அன்பின் சாட்சிகளாக மறைப்பணியாளர்களாக இருக்கின்றோம் என்றும் கூறினார்.
Crema பகுதியில் பிறந்து மியான்மாரில் மறைப்பணியாளராகப் பணியாற்றி மறைந்த அருளாளர் ALFREDO CREMONESI அவர்களின் பணியைச் சுட்டிக் காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மலைக்கிராமத்தில் உறுதியான மனதுடன் பணியாற்றியவர், கத்தோலிக்கரல்லாத மக்களின் நலனுக்காக தன்னைக் கையளித்த உலகளாவிய மனிதர் இவர் என்றும் எடுத்துரைத்தார்.
ஆழமான பக்தி, தாராள மனதுடன் பணி, மறைப்பணி ஆர்வம், ஆகியவை கொண்டு மக்களிடையே ஒற்றுமையை விதைத்தவர், இளையோர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தவர், தேவையிலிருப்பவர்களுக்கு உதவியளித்தவர் அருளாளர் CREMONESI என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயந்திர துப்பாக்கிகளின் முனையில் தன்னுயிரை இழந்த அவரின் குரலும் பணியும் இன்று தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கு நன்றியினையும் தெரிவித்தார்.
மறைப்பணியாளர்களாகிய நாங்கள் உண்மையில் ஒன்றுமில்லாதவர்கள் கடவுளால் கொடுக்கப்பட்ட பணியை செயல்படுத்துவதை விட ஆன்மாவின் ஆழத்தைப் பார்க்க அழைக்ப்படுபவர்கள் என்ற அருளாளர் CREMONESI அவர்களின் வார்த்தையை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் பெரிய கைகளில் ஒரு சிறிய கருவியாக தாழ்ச்சியுடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட Crema மறைமாவட்டத்தைச் சார்ந்த திருப்பயணிகளைக் கேட்டுக்கொண்டார்.
இயேசுவோடு சகோதர சகோதரிகளை ஒன்று சேர்ப்பதன் வழியாக ஓர் அற்புதமான பணியையும், அப்பணியினால் மகிழ்வையும், அப்படி சந்தித்து வரவேற்பவர்களிடம் இறைவன் என்ன செய்கிறார் என்பதைக் காணும் ஆச்சரியமும் நம் ஒவ்வொருவருக்கும் தேவை என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை
தேவையிலிருப்பவர்களை அன்புடன் வரவேற்கவும், அனைவரையும் உள்ளடக்கிய முயற்சிகளை மேற்கொள்ளவும், வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோர் கல்வி, வயது முதிர்ந்தோர், பலவீனமானவர்கள், ஏழைகள் மற்றும் நோயாளிகளை மறந்துவிட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்