சாண்டோர் மாளிகையில் திருத்தந்தை பிரான்சிஸ்
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஹங்கேரி உள்ளூர் நேரம் காலை 11.00 மணிக்கு, அதாவது இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 2.30 மணிக்கு சாண்டோர் மாளிகையை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஹங்கேரி அரசால் அதிகாரப் பூர்வமாக வரவேற்கப்பட்டார். ஹங்கேரியின் அரசு அதிகாரிகள் திருத்தந்தைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பின்னர், திருத்தந்தையுடன் சென்ற குழு அரசுத்தலைவருக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர். அதன் பின்னர் உள்ளூர் நேரம் 11.30 மணிக்கு நாட்டுத்தலைவர்களை சாண்டோர் மாளிகையின் முதல் தளத்தில் உள்ள ஊதா அறையில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அப்போது இரு தலைவர்களிடையே பரிசுகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
ஹங்கேரிக்கான திருத்தந்தையின் நினைவுப் பதக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு நினைவுப் பரிசினைக் கொடுப்பது வழக்கம். அதுபோல் ஹங்கேரிக்கும் நினைவுப் பதக்கம் ஒன்றினை வழங்கினார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயர் FRANCISCVS PONTIFEX MAXIMVS என்று இலத்தீனில் பொறிக்கப்பட்டுள்ள அப்பதக்கத்தின் மையத்தில், ஹங்கேரியின் பாதுகாவலரான புனித அன்னை மரியாளின் உருவம் சூரிய ஒளியால் சூழப்பட்டுள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் புவியியல் வரைபடத்தை அடையாளப்பூர்வமாக கோடிட்டுக் காட்டுவது போல அமைந்துள்ளது. மேலே உள்ள புறா வடிவம் தூய ஆவியையும் அவர் கொடையாகத் தரும் அமைதியையும் அடையாளப்படுத்துகின்றது. அன்னைமரியின் காலடியில், ஹங்கேரியின் முதல் கத்தோலிக்க மன்னரான புனித முதலாம் ஸ்தெவான் கையில் இரட்டைச் சிலுவையுடன் இருப்பது போலவும், அன்னை மரியாளுக்கு கிரீடத்தை அளிப்பதன் வழியாக, நாட்டை அவரிடம் ஒப்படைப்பது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இடதுபுறத்தில், புனிதரின் வலது கையானது நினைவுச்சின்னமாக வைக்கப்பட்டிருக்கும் புனித ஸ்தேவான் பேராலயமும், வலதுபுறத்தில் புனித ஸ்தேவானின் கிரீடம் வைக்கப்பட்டுள்ள புடாபெஸ்ட் பாராளுமன்றமும் உள்ளது. வலப்புறம் கீழே பல ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் பெரிய டான்யூப் நதியும், அதனைக் கடக்க உதவும் நகரத்தின் பாலங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. கீழே திருத்தூதுப் பயணத்தைக் குறிக்கும் சொற்கள், ஆண்டு மற்றும் நாள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அரசுத்தலைவரை அவரது குடும்பத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் சந்தித்துக் கொண்டிருந்த அதேவேளையில் பிரிதொரு அறையில் திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் அவர்கள் ஹங்கேரியின் பிரதமர், திருப்பீடத்தூதர் மற்றும் திருப்பீடத்தூதரக அதிகாரிகளை சந்தித்து உரையாடினார்.
ஹங்கேரியின் குடியரசுத்தலைவர்
ஹங்கேரியின் குடியரசுத்தலைவரான திருமதி. Katalin Novák, அவர்கள், 1977 இல் Seghedino இல் பிறந்தவர். புடாபெஸ்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் பொது நிர்வாகத்தைப் பயின்று, Szeged பல்கலைக்கழகத்திலும் பாரீசிலும் தனது படிப்பைத் தொடர்ந்தார். 2001ஆம் ஆண்டு வெளியுறவுத்துறை அலுவலகத்தில் தனது பணியைத் தொடங்கிய Novák, 2010 மற்றும் 2012 க்கு இடையில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஆலோசகராக இருந்தார்; 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே, மனித வள அமைச்சக அவையின் தலைவராகவும் பணியாற்றியவர். 2018 முதல், ஹங்கேரிய தேசிய சட்டமன்ற உறுப்பினர்; 2020 முதல் 2021 வரை, குடும்பங்களுக்கான அமைச்சர் என பலப் பொறுப்புக்களை ஆற்றிய இவர் 2022ஆம் ஆண்டு 10 மார்ச் அன்று, ஹங்கேரி பாராளுமன்றத்தால் குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திருமதி நோவாக்கிற்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
ஹங்கேரி உள்ளூர் நேரம் 11.55 மணிக்கு சாண்டோர் மாளிகையின் மரிய தெரசா அறையில் பிரதமர் விக்டர் ஓர்பன் அவர்களையும் அவரது குடும்பத்தாரையும் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். Székesfehérvárஇல் 1963ஆம் ஆண்டு பிறந்த ஓர்பன், 1987ஆம் ஆண்டு புடாபெஸ்டில் உள்ள லோராண்ட் ஈட்வோஸ் பல்கலைக்கழகத்தின் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றார். 1988 இல் அவர் உருவாக்கிய மாணவர் சீர்திருத்த இயக்கமான இளம் ஜனநாயகவாதிகளின் கூட்டணி இன்று Fidesz என்று அழைக்கப்படுகின்றது. 1990 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 1998 இல் முதல் முறையாக பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர் 2010, 2014 மற்றும் 2018 இல் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. ஓர்பன் அவர்களின் மனைவி அனிகோ லெவாய் இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்.
பிரதமரையும் அவரது குடும்பத்தாரையும் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முன்னாள் கார்மேல் துறவு மட அறைக்குச் சென்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்