தேடுதல்

புதன் மறைக்கல்வி உரை - நம்பிக்கையின் ஊற்று சிலுவை

ஏப்ரல் 5 புதன் கிழமை வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு புதன் மறைக்கல்வி உரையை நம்பிக்கையின் ஊற்று சிலுவை என்ற தலைப்பில் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

நமக்காக பாடுகள் பட்டு, சிலுவை சுமந்து உயிர்விட்ட இயேசுவின் அன்பை அதிகமாக தியானிக்க, திருஅவையால் கொடுக்கப்படும் காலமாம் இத்தவக்காலத்தின் புனித வாரத்தில் நாம் இருக்கின்றோம். புனித புதனாகிய இன்று ஏப்ரல் 5 ஆம்  நாள் வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு மறைக்கல்வி உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். புனித வாரத்தை தகுந்த முறையில் கடைபிடிக்கவும், நமது பழைய பாவ இயல்புகளை இயேசுவிநுடைய சிலுவையின் முன் அர்ப்பணித்து மனமாற்றம் பெற்றிடவும் வேண்டி, இறைவனின் வார்த்தையையும் அதற்கான திருத்தந்தையின் உரையையும் கேட்கக் கூடியிருந்த மக்களுக்கு நம்பிக்கையின் ஊற்று சிலுவை என்ற தலைப்பில் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

முதலில் திருத்தூதர் பேதுருவின் முதல் திருமடல் 2ஆம் அதிகாரம் 21 முதல் 24 வரையுள்ள  துன்புறும் இயேசுவின் முன்மாதிரி என்ற தலைப்பில் இடம்பெற்ற இறைவார்த்தைகள் பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை தனது மறைக்கல்வி உரையை வழங்கினார்.

1 பேதுரு 2 : 21 - 24

கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்புற்று ஒரு முன்மாதிரியை வைத்துச் சென்றுள்ளார். எனவே, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்; இதற்காகவே அழைக்கப்பட்டுள்ளீர்கள். “வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை; வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை.” பழிக்கப்பட்டபோது பதிலுக்குப் பழிக்கவில்லை; துன்புறுத்தப்பட்டபோது அச்சுறுத்தவில்லை; நியாயமாகத் தீர்ப்பு வழங்குவோரிடம் தம்மை ஒப்படைத்தார். சிலுவையின்மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார். அவர்தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள்.

திருத்தந்தையின் மறைக்கல்வி உரை சுருக்கம்

அன்பான சகோதர சகோதரிகளே: புனித வாரத்தின் இந்த நாட்களில், இயேசுவின் பாடுகள், மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றின் மறைபொருளைக் கொண்டாட நாம் தயாராகிறோம். முதலில் தோல்வி மற்றும் விரக்தியின் அடையாளமாகத் தோன்றும் சிலுவை, வாழ்வின் மரமாகவும், அழியாத நம்பிக்கையின் ஆதாரமாகவும் தன்னை அடையாளப்படுத்துகின்றது. சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைப் பற்றிய நமது சிந்தனை, அவரது நிந்தை,அவமானத்தில் நம்மைப் பற்றிய தவறான மாயைகளை அகற்றி, நம்மைப் பற்றிய உண்மையை ஒப்புக்கொள்ளவும், குணப்படுத்துதல் மற்றும் ஒரு புதிய தொடக்கத்திற்கான வழிமுறைகளைக் கண்டறியவும் நம்மை அழைக்கிறது. நமக்காக இயேசு தழுவிய துன்பங்கள் வெறும் உடல் சார்ந்தவை அல்ல, துரோகம், மறுதலிப்பு சிலுவை மரணம் என கசப்பான மனித அனுபவங்கள் மற்றும் துன்பங்கள் சார்ந்தது. இயேசுவின் காயங்களில், நாம் நம்மைக் காணலாம்; இறைத்தந்தையின் விருப்பத்திற்குக் கீழ்ப்படிவதிலும், சிலுவையில் அறையப்பட்டவர்களை மன்னிப்பதிலும், அவர் கடவுளுடைய அன்பின் வெற்றியை வெளிப்படுத்துகின்றார். மேலும் உள்மன புதுப்பித்தல் மற்றும் மீட்பின் நம்பிக்கையை நமக்கு வழங்குகிறார். வரவிருக்கும் இந்நாட்களில், கடவுளை அதிகமாக நெருங்கி, தீமையை நன்மையாகவும், நம் சகோதர சகோதரிகளின் துன்பத்தை குறிப்பாக மிகவும் தேவையிலிருப்பவர்களின் துன்பத்தை தாராள அன்பாகவும் மாற்றுவதற்கு அவருடைய சிலுவையின் வல்லமையில் நமது நம்பிக்கையை வைப்போம். கடவுள் உங்களை நிறைவாக ஆசீர்வதிக்கட்டும்.

இவ்வாறு தனது புதன் மறைக்கல்வி உரையை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூடியிருந்த திருப்பயணிகள் குறிப்பாக இஸ்பெயின், நெதர்லாந்து, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், கனடா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த குழுக்கள் அனைவரையும் வாழ்த்தினார். தூய ஆவியின் அருளால் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட இதயங்களுடன் கடவுளாகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக் கொண்டாட இந்த புனித வாரம் நம்மை வழிநடத்தட்டும் என்று கூறி தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 April 2023, 08:52